பதிவுத்துறையின் இணையதள வில்லங்க குறிப்பை நீக்கம் செய்து போலியான ஆவணங்கள் மூலம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சொத்தினை அபகரித்து விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கள்ளிக்குப்பம் கிராமத்தில் 2,400 சதுரடி சொத்தின் உரிமையாளர் வெங்கடசாமி நாயுடு என்பவரைப் போல ஆள்மாறாட்டம் செய்து, லோகநாதன் என்பவர் பெயரில் பொது அதிகாரம் பதிவு செய்து கொடுத்த ஆவணம் போலியானது என வெங்கடசாமி நாயுடு அவர்களின் வாரிசான திருமதி.மல்லிகா என்பவர் பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் கடந்த 26.10.2019 அன்று கொடுத்த புகாரின் பேரில் மத்திய சென்னை மாவட்ட பதிவாளர் அவர்களால் போலியான ஆவணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதனை வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலக வில்லங்கச் சான்றில் அட்டவணை குறிப்பில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் சிலர் சார்பதிவாளர் அலுவலக வில்லங்க குறிப்பினை நீக்கம் செய்து மீண்டும் போலியான ஆவணம் மூலம் மேற்படி சொத்தை விற்பனை செய்துள்ளனர். இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய சென்னை, மாவட்ட பதிவாளர் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி புலனாய்வு பிரிவு-1ல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நில மோசடி புலனாய்வு பிரிவு-1 காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் லோகநாதன் தனது கூட்டாளிகளான A.K.கிருஷ்ணன். வெங்கடேசன் ஆகியோருடன் சேர்ந்து பதிவுத்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சரவணன் மற்றும் வேணு ஆகியோர் மூலம் சார்பதிவாளர் அலுவலக வில்லங்க பதிவிலிருந்து குறிப்பினை நீக்கம் செய்து போலியான பொது அதிகார ஆவணம் ரத்து செய்ததை மறைத்து, மேற்படி சொத்தினை இரண்டு நபர்களுக்கு விற்பனை செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், உத்தரவிட்டடதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையர் C.மகேஸ்வரி, அவர்களின் வழிகாட்டுதலின்படி மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் S.ஆரோக்கியம் அவர்களின் மேற்பார்வையில் நில மோசடி புலனாய்வு பிரிவு-1 உதவி ஆணையர் S.அனந்தராமன் மற்றும் காவல் ஆய்வாளர் வி.மேரி ராணி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.லோகநாதன், வ/60, த/பெ.பால்ராஜ், பாலாஜி நகர், புழல், சென்னை, வெங்கடசாமி நாயுடு போல ஆள்மாறாட்டம் செய்த 2.A.K.கிருஷ்ணன், வ/61, த/பெ.தங்கப்பா, அண்ணாநகர் கிழக்கு. சென்னை 3.வெங்கடேசன், வ/45, த/பெ.ராஜவேலு, கங்காதரன் தெரு, புழல் சென்னை ஆகிய மூவரை நேற்று (30.08.2023) கைது செய்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (30.08.2023) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.