மதுரை: மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 47வது பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜை நடத்தி, பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். மதுரை-சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 1977 ஆக.15ம் தேதி முதன் முதலில் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் மீட்டர் கேஜ் பாதையில் 100 கி.மீ.,வேகத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் என்ற பெருமை இந்த ரயிலுக்கு உண்டு. முன்பு பச்சை, மஞ்சள் வண்ணங்களில் தனித்துவமாக வலம் வந்தது. ரயில் கார்டுக்கும், ஓட்டுனருக்கும் இடையே இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்ட முதல் ரயில் இதுதான். தனது முதல் நாள் ஓட்டத்தில் மதுரை-சென்னை இடையிலான 495 தூரத்தை 7 மணி 5 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்து.
2012 மார்ச் 3ம் தேதி அதே தூரத்தை 6 மணி 43 நிமிடத்தில் கடந்து தனது சாதனையை வென்றது. மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்படும் ரயில்களில் ஏ.சி., சேர் கார் பெட்டிகள் முதன்முதலில் இந்த ரயிலில் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரயிலின் பிறந்த நாள் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ரயில் ஆர்வலர்கள், பயணிகள் கலந்து கொண்டனர். ரயில் நிலைய பிளாட் பார்ம் 3ல் இருந்து நேற்று காலை 6.40 மணிக்கு சென்னை புறப்பட இருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை பூமாலையால் அலங்கரித்து, தீபாராதனை காட்டினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோட்ட ரயில்வே மேலாளர் ஷரத் வத்ஸவா, கூடுதல் மேலாளர் நாகேஸ்வரராவ் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து கவுரவித்தனர்.
ஓட்டுனர் செல்வராஜூ, உதவி ஓட்டுனர் கிருஷ்ணகுமாருக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த ரயிலின் முன்னாள் ஓட்டுனர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணன், முனாவர் பாஷா ஆகியோருக்கு கேடயம் வழங்கி கவுரவித்தனர். பயணிகளுக்கு பெட்டிகளிலேயே கேக் வெட்டி வைகை ரயிலின் சிறப்புகளை எடுத்துக் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை கிஷோர், நரேஷ், அருண்பாண்டியன், ஹரி, அரவிந்த், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.