சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 37 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும், வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீபாவளிக்கு புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம் மற்றும் என்.எஸ்.சி.போஸ் ரோடு, எம்.சி.ரோடு - ஜி.ஏ.ரோடு, கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்கள் நடைபெறுவதை தடுக்கம் வகையிலும், கூட்ட நெரிசலில் காணாமல் போனவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து தரும் வகையிலும், சிறப்பு கட்டுப்பாட்டறைகள் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ெசய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விபரம்:
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், குற்ற தடுப்பு முறைகள். போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்களை ஒழுங்குப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
- சென்னையில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் என சுமார் 18,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்டு, மேற்கூறிய 3 பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கூடுதல் கவனங்களுடன் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- தி.நகர்-10, அடையார்-1, பூக்கடை-4, வண்ணாரப்பேட்டை-2, கீழ்ப்பாக்கம்-4, திருவல்லிக்கேணி-2 மற்றும் கோயம்பேடு-2 என மேற்கூறிய இடங்களில் மொத்தம் 25 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் நேரடியாக கண்காணித்தும், மேலும் 37 பைனாகுலர் காவல் குழுக்கள் மூலமும் குற்றச் செயல்கள் நடவாமல் கண்காணித்து வரப்படுகிறது.
- தி.நகர், அடையார், பூக்கடை, வண்ணாப்பேட்டை, கீழ்பாக்கம், திருவல்லிகேணி, மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 12 தற்காலிக காவல் கட்டுப்பாட்டறைகள் மற்றும் 37 தற்காலிக காவல் உதவி மையங்கள், 10 மினி சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து கேமரா பதிவுகளை கண்காணித்தும், காவலர்கள் 100 கேமராக்கள் அணிந்து கூட்ட நெரிசலை கண்காணித்தும் வருகின்றனர். மேலும் கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்கள், சிறுமியர்களை கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- தி.நகர், புனித தோமையர் மலை, பூக்கடை மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் கூடுதலாக 205 தற்காலிக சிசிடிவி கேமராக்கள் அமைத்தும், அதன்மூலம் நடப்பு நிகழ்வுகளை (நேரலையில்) கண்காணித்து, குற்றங்கள் நிகழாமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- அடையார், திருவல்லிக்கேணி மற்றும் மற்றும் கோயம்பேடு பகுதியில் 4 அகன்ற எல்இடி திரையின் மூலம் பாதுகாப்பு வாசகங்கள் மற்றும் குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
- தி.நகர், பூக்கடை, திருவல்லிக்கேணி மற்றும் கோயம்பேடு பகுதியில் 7 டிரோன் கேமராக்கள் மூலம் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் கண்காணித்து குற்ற நிகழ்வுகள் நடக்காதவாறு கண்காணித்து வருகின்றனர்.
- பழைய குற்றவாளிகளை கண்காணித்து பிடிப்பதற்காகவும், குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும் ‘எப்ஆர்எஸ்’ என்ற செல்போன் செயலி மூலம் 199 காவல் குழுவினர் முக்கிய இடங்களில் சந்தேக நபர்களை தணிக்கை செய்து வருகின்றனர்.
- சென்னையில் பொதுமக்கள் கூடும் இடங்களான, வணிக வளாகங்களிலும், மார்கெட் பகுதிகளிலும் சென்னை பெருநகர காவல்துறையின் நடமாடும் உடைமைகள் சோதனை செய்யும் வாகனத்தின் மூலம் பொதுமக்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
- பொருட்கள் வாங்க வரும் பெண்களின் கழுத்திலுள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக் கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்கள் மற்றும் சிறவர்கள் காணாமல் போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் கட்டுவதற்கு கை பட்டை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.
- பட்டாசு கடைகளின் அருகில் காவல்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் சுகாதராத் துறையினருடன் ஒருங்கிணைந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
- உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும், தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின் படியும், தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே, பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து, பாதுகாப்பாகவும், மகழ்ச்சியுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


