பாரீஸ் : கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி 8வது முறையாக தங்கப் பந்து விருதை வென்று சாதனை படைத்துள்ளார். பிரான்சில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் மெஸ்ஸிக்கு இவ்விருது வழங்கப்பட்டது. பிரஞ்சு இதழான பிரான்ஸ் புட்பால் 1956ம் ஆண்டு முதல் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு தங்கப்பந்து எனப்படும் Ballon d’or விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இவ்விருதுக்காக 2022 ஆகஸ்ட் முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நடப்பாண்டிற்கான Ballon d’or விருதை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த விருதுக்காக பரிந்துரை பட்டியலில் 30 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
இதில் கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், மெஸ்ஸி, எம்பாப்பே, ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர். இதில் முதலிடம் பிடித்த மெஸ்ஸி, நடப்பு ஆண்டுக்கான Ballon d’Or விருதை வென்றார். இதன் மூலம் 8-வது முறையாக அவர் இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.தற்போது இன்டர் மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இதற்கு முன்னர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை ஸ்பெயின் நாட்டிற்காக விளையாடி வரும் அடனா பொன்மதி வென்றார். ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை மான்செஸ்டர் சிட்டி அணி வென்றது. ஹாலண்ட், Gerd Muller டிராபியை வென்றார். மார்ட்டினஸ், Yachine டிராபியை வென்றார்.