சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கால்பந்து போட்டியில், அந்த பள்ளி அணி வெற்றி பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, அனைத்து மாணவர்களையும் தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி அடித்து உதைத்தார். மாணவர்களை காலால் எட்டி உதைத்தார். இதை ஆசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாதையடுத்து, மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, இதுகுறித்து விசாரணை நடத்த சிஇஓ கபீருக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததற்காக மாணவர்களை தாக்கியதும தெரியவந்தது. மாவட்ட நிர்வாகம் உத்தரவையடுத்து அந்த ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியது. அதற்கு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து பள்ளியின் தாளாளர் கிறிஸ்டிராஜ், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.