வாகனங்களுக்கு டயர் போல நமது கால்களுக்கு பாதங்கள். அதற்கேற்ப தோல் பகுதி 4 மில்லி மீட்டர் தடிமன் கொண்டதாக அமைந்துள்ளது.இயல்பான பாதங்களின் நடுப்பகுதி சற்று உள்நோக்கி வளைந்திருக்கும். இப்படி அமைந்திருக்கும் பாதம்தான் ஆரோக்கியமான பாதம் ஆகும். இப்படி இல்லாமல் சமமாக (Flat) ஆக இருக்கும் பாதங்கள் தட்டைப்பாதங்கள் ஆகும்.பாதங்கள் தட்டையாக இருப்பது ஆரோக்கியமானது அல்ல. தட்டையான பாதம் உள்ளவர்களால் நேராக நடக்க இயலாது. ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க முடியாது. பாதத்தில் அடிக்கடி வலி ஏற்படும்.குதிகால் நரம்பின் நீளம் குறைவாக இருப்பது, நீண்ட நாட்கள் பாதங்களுக்கு வேலை கொடுக்காமல் படுத்தபடி இருத்தல், பக்கவாதத்தில் பாதிக்கப்படுதல் மேலும் பிறவியிலேயே தட்டையாக பாதங்கள் அமைவது போன்றவை தட்டைப்பாதங்கள் ஏற்படுவதன் காரணங்கள் ஆகும்.தட்டைப் பாதங்களால் கால்களில் மூட்டுவலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படும். உடல் அமைப்பு, நடைகளில் மாற்றம் ஏற்படும்.நாம் போடுகின்ற செருப்பு தேய்மானத்தை வைத்து பாதங்களின் குறைபாடுகளை அறிய முடியும். செருப்பின் நடுப்பகுதி தேய்ந்தால் இயல்பான பாதம் எனவும் வெளிப் பகுதியோ உள்பகுதியோ தேய்ந்திருந்தால் பாதங்களில் பிரச்னை இருக்கிறது எனவும் அறியலாம்.
குழந்தைகள் நடப்பதற்கு முன்பே ஷூ போடுவது நல்லதல்ல. இதனால் குழந்தையின் பாதம் தட்டையாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. பிறந்த குழந்தையின் பாதங்களில் உள் வளைவு இருக்காது. நடக்க நடக்கத்தான் இயல்பான பாதம் அமையும். எனவே குழந்தைகளை வெறுங்காலுடன் நடக்க விடுங்கள். கடற்கரை மணலில் குழந்தைகளை நடக்க விடுவது மிகச் சிறந்த பயிற்சி ஆகும். மேலும் வாரம் ஒருமுறை பெரியவர்களும் கடற்கரை மணலில் நடப்பதும்
பயன் தரும். கால்களின் முன் விரல்களை சுருக்கி நீட்டுவது, கட்டைவிரல்களால் எழுதுவது பொருட்களை கவ்வித் தூக்குவது, உருண்டையான குச்சிகளை கால்களால் உருட்டுவது போன்ற பயிற்சிகளால் தட்டைப் பாதங்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து இயல்பான பாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனால் வாகனம் ஓடாது. அது போல் பாதங்களில் கல், முள், கண்ணாடி இவைகளால் காயம் ஏற்பட்டால் நடக்க முடியாது. எனவே அதை உடனே வைத்தியம் செய்து குணப்படுத்திக் கொள்ள வேண்டும்.
– த.சத்தியநாராயணன்