சென்னை : பாதம் பாதுகாப்போம் திட்டம் மூலம் கிட்டத்தட்ட 22 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பயனடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 25 சதவீதம் பேர் பாதம் தொடர்பான பாதிப்புகளால் அவதிப்படுவதும், அவர்களில் 85 சதவீதம் பேர் கால்களை இழக்க நேரிடுவதும் தேசிய பேரிடர் ஆகும். தமிழகத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சர்க்கரை நோயால் ஏற்படும் பாத பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறியாவிட்டால், ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. முன்கூட்டியே கண்டறிந்தால் 85 சதவீத கால் அகற்றத்தை தடுத்துவிட முடியும். இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை சார்பில் ‘பாதம் பாதுகாப்போம் திட்டம்’ அறிமுகம் செய்ய கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
பாதம் பாதுகாப்போம் திட்டம் மூலம் இதுவரை 21,72,829 நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பரிசோதனை செய்யப்பட்டு, 18,440 நோயாளிகளுக்கு கால்புண் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருந்துவமனைகள் மற்றும் மருந்துவமனைகளிலுள்ள மருந்துவக்கல்லூரி பாத மருத்துவ மைங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 19,050 அறுவை சிகிச்சைகள் நீரிழிவு பாத பாதிப்புக்காக மருந்துவக்கல்லூரி மருந்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் இது தொடர்பாக கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் பணியாளர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோய் உள்ள பணியாளர்களுக்கு கால்களில் புண், சீழ் வடிவது உள்ளிட்டவை பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பரிசோதனை பிறகு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி முதலமைச்சர் காப்பீட்டு மூலம் இலவசமாக செயற்கை கால் அவர்களுக்கு வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு செயற்கை கால் வேண்டும் என்றால் அருகில் உள்ள மருத்துவமனைகள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் முழுவதும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.