நமது உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் முடிவடையும் இடம் நமது உள்ளங்கால்கள்தான். அதனால் தான்
உள்ளங்காலில் நாம் கொடுக்கும் சரியான மற்றும் சீரான அழுத்தமானது அந்த நரம்புகள் செல்லும் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. பாதங்கள் பல நரம்புகள் சந்திக்கும் ஓர் இடம் என்பதோடு ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு உறுப்புடனும் சம்பந்தப்பட்டவை. எனவே அந்தந்த நரம்புகளுக்கு அழுத்தம் கொடுத்து ரத்த ஓட்டத்தைச் சீராக்குவதன் மூலம் வலி மற்றும் சில பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்கிறார் பாத அழுத்த சிகிச்சை நிபுணரான விஷ்ணுப்பிரியா.
இந்தத் துறையை நீங்கள் தேர்வு செய்தது எப்படி?
எனது அம்மாவிற்கு சில உடல்நலப் பிரச்னைகள் இருந்தது. அதனோடு இணைந்து தூக்கமின்மை பிரச்னைகளும் இருந்தது. அப்போது சிலர் இந்த பாத அழுத்த சிகிச்சை முறையினை அம்மாவிற்கு பரிந்துரை செய்தனர். அப்போது அவர்களுடன் இந்த சிகிச்சைக்காக சென்ற பொழுது நானும் இந்த சிகிச்சையை செய்து பார்த்தேன். அதன் பலன்களை நேரடியாக கண்டபோது இத்துறை மீதான ஈடுபாடு ரொம்பவும் அதிகரித்தது. அதன் பிறகு இது குறித்த முறையான பயிற்சிகளை மேற்கொண்டேன். அதன் பிறகு தான் இந்த அரோரா பாத அழுத்த சிகிச்சை மையத்தினை தொடங்கினேன். தற்போது கடின உழைப்புடன் 9 வருடங்களாக இத்துறையில் ஈடுபட்டு வருகிறேன் . தற்போது அந்த நீண்ட அனுபவத்துடன் நான்கு கிளைகளுடன் வெற்றி நடைபோட்டும் வருகிறேன்.
பாத அழுத்த சிகிச்சை குறித்துச் சொல்லுங்கள்?
பாதங்களில் இருக்கும் நரம்புகளுக்கு நமது கைவிரல்கள் மூலம் அழுத்தம் கொடுப்பதே பாத அழுத்த சிகிச்சை என்கிறோம். உள்ளங்காலில் நாம் கொடுக்கும் சரியான மற்றும் சீரான அழுத்தமானது அந்த நரம்புகள் செல்லும் பகுதியில் உள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் சீராக்குகிறது. இதனை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் தாராளமாக செய்து கொள்ளலாம். அதில் சின்ன பிள்ளைகள் என்றால் ஐந்து பத்து நிமிடங்கள் செய்தாலே போதுமானது. ஆனால் பெரியவர்கள் என்றால் ஒரு மணிநேரம் கூட செய்து கொள்ளலாம். நமது உடலில் பரவியிருக்கும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் கால் பாதத்தில் வந்தடைந்து மீண்டும் உடலுக்குப் பரவுகின்றது. எனவே உடலின் சில பாதிப்பிற்குக் கால் பாதத்தில் முறையான அழுத்தம் கொடுப்பதன் மூலமாக நற்பலன்களைப் பெறலாம்.
பாத அழுத்த சிகிச்சை செய்து கொள்வது எதற்காக?
பாத அழுத்த சிகிச்சையானது நமது முன்னோரால் பின்பற்றப்பட்ட ஒரு அற்புதமான சிகிச்சை முறை. தற்போது இயற்கை மருத்துவ முறையில் சில உடல் மற்றும் மனரீதியான உபாதைகளை எளிய முறையில் தீர்க்கும் துணை சிகிச்சையாவும் பயன்படுகிறது. நமது உடலில் எந்த ஒரு பாகத்தின் வலிகளுக்குமே பாத அழுத்த சிகிச்சை நற்பலன்களை தரக்கூடியது. குறிப்பாக மன அழுத்தம், ரத்த அழுத்தம், முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி, மூட்டு வலி என உடலின் எந்தப் பகுதியில் வலி ஏற்பட்டாலும், அதற்கு பாத அழுத்த சிகிச்சை சிறப்பான தீர்வாக அமையும். குறிப்பாக தூக்கமின்மை பிரச்னைகள் சரிசெய்யப்படுவதால் செரிமான பிரச்னைகள் விலகும். இதனால் சரும ஆரோக்கியம் நிறைய மேம்படும்.
பாதசிகிச்சை முறையில் பலன்கள் என்ன?
பாத அழுத்த சிகிச்சை அளிப்பதால் நமது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது தூக்கத்தைத் தூண்டு வதோடு வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும், மன அழுத்தத்தைக் குறைப்பது, ரத்த அழுத்தத்தை சீராக்குவது, ஹார்மோன் பிரச்னைகளைத் தீர்ப்பது போன்ற செயல் களையும் செய்கிறது. குறிப்பாக தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இந்த சிகிச்சை முறையினை செய்து கொண்டால் நல்ல பயனை பெறலாம். உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுக்கும்போது, டென்ஷன் குறைவதோடு, உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் அடைகிறது. மசாஜ் தெரபியில் ஒரு பகுதிதான் ரிப்ளக்ஸாலஜி என்னும் பாத அழுத்த சிகிச்சை முறை. இதனை வாரம் ஒரு முறைகூட தாராளமாக செய்துகொள்ளலாம்.
பெடிக்கியூர் மற்றும் பாத சிகிச்சை இரண்டுக்குமான வித்யாசம் என்ன?
பாத சிகிச்சை என்பது வலிகளை டென்ஷனை குறைக்கும் ஒரு சிகிச்சை முறை. பெடிக்கியூர் என்பது பாதங்களை அழகாக வைக்க செய்யப்படும் அழகுசாதனக் கலை. அதே சமயம் பெடிக்கியூர் முறையிலும் மசாஜ் தெரபிகள் உண்டு. நாங்கள் பாதங்களுக்கு மூன்று வகையான பெடிக்கியூர் செய்து வருகிறோம். சாதாரண பெடிக்கியூர், கிளாசிக் பெடிக்கியூர், டிரெடிஷ்னல் பெடிக்கியூர் என செய்கிறோம். இதில் பாதங்களை இளஞ்சூடான நீரைக் கொண்டு சற்று நேரம் ஊற வைத்து, நகங்களை சீராக வெட்டி சுத்தப்படுத்திய பின்பு பல வித கிரீம்களை உபயோகித்து சருமத்தை மிருதுவாக்குவோம். இறுதியாக ஒரு மஜாஜ் தெரபியுடன் முடிவடையும். இது நமது பாதங்களுக்கு அழகோடு ஆரோக்கியத்தையும் பெற்று தரும். பெடிக்கியூர் செய்வதன் மூலம் நாம் மிகவும் ரிலாக்ஸாக உணர்வோம்.
பாதங்களைப் பாதுகாப்பது எப்படி?
முன்பை விட தற்போது பாதங்களை பாதுகாப்பதில் பலருக்கும் விழிப்புணர்வு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது. போன தலைமுறையினர் கால்தானே யார் பார்க்க போகிறார்கள் என்கிற அலட்சியத்தால் வறண்ட கால்கள் பித்த வெடிப்பு என அவதிப்பட்டு வந்தனர். நல்லவேளை தற்போது அந்த நிலை இல்லை. பாதங்களை அவ்வப்போது இளஞ்சூடான நீரில் பத்து நிமிடம் வைத்தால் கால் வலி பஞ்சாய் பறப்பதோடு பாதம் மிருதுவாக இருக்கும். அதனை ஈரமில்லாமல் துடைத்து மாய்ச்சரேசர் அல்லது கீரிம்களை பயன்படுத்தி வந்தால் பாதம் பட்டு போல மின்னும். ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய பல்வேறு உடலுறுப்புக்களில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக அர்த்தம். எனவே தினமும் இரவில் படுக்கும் முன் ஏதோவொரு ( தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் கூடுதல் நற்பலன்கள் உண்டு) எண்ணெயை உபயோகித்து சிறிது நேரம் உங்கள் பாதங்களை மசாஜ் செய்துவிட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்குத் தெரியாமலேயே பல்வேறு நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். என்கிறார் விஷ்ணுப்பிரியா.
– தனுஜா ஜெயராமன்