புதுடெல்லி: ‘‘இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகளாவிய கவலையாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்று இந்தியா உலகளாவிய உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்குகிறது’’ என வேளாண் பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். டெல்லியில் வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32வது சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் 75 நாடுகளை சேர்ந்த சுமார் 1000 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் பொருளாதார கொள்கைகளின் மத்தியில் விவசாயம் உள்ளது. 2024-2025ம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் நிலையான மற்றும் தட்பவெப்பநிலையை எதிர்க்கும் விவசாயத்துக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது. 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச விவசாய பொருளாதார மாநாடு நடைபெறுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்திருந்த சமயத்தில் இந்தியாவில் உணவு பாதுகாப்பு உலகிற்கு ஒரு கவலையாக இருந்தது. ஆனால் இன்று உலக உணவு பாதுகாப்பு மற்றும் உலகளாவிய ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு இந்தியா செயலாற்றி வருகின்றது. உணவு பாதுகாப்பில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. மேலும் உணவு முறை மாற்றம் குறித்த விவாதங்களுக்கு இந்தியாவின் அனுபவம் மதிப்புமிக்கது. இது உலகத்திற்கே பயனளிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 1900 புதிய காலநிலையை தாங்கக்கூடிய பயிர்களை வழங்கியுள்ளது. ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியா ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.