நன்றி குங்குமம் டாக்டர்
உணவியல் நிபுணர் வண்டார்குழலி
எலும்புகள் பலவீனமடைவதால், உடலிலுள்ள உறுப்புகளின் பாதுகாப்பு குறைவதோடு அல்லாமல், உடலின் அமைப்பும் தோற்றமும் மாறும் நிலை ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் முதுகுப் பகுதி கூன் விழுதல், இடுப்புப் பகுதி வெளிப்புறம் தள்ளப்படுதல், மார்பு எலும்பு முன்னோக்கி வளைதல், கால்கள் இரண்டும் உள் அல்லது வெளிப்பக்கமாக வளைந்து நடப்பதற்கு சிரமப்படுதல், உயரம் குறைந்து விடுதல் போன்றவை முக்கியமானவை.
உடலை உறுதிப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்யாமல் இருப்பது, நாட்பட்ட நோய்களுக்கு எடுத்துக்கொள்ளப்படும் ரத்த இளக்கிகள், சிறுநீர் பிரியும் மருந்துகள், மெனோபாஸ் காலம், மூட்டு வாதம், கீல் வாதம், தசை அழற்சி, சிறுநீரக நோய்கள், கால்சியம் மற்றும் வைட்டமின்; குறைவாக இருக்கும் துரித உணவுகள், பரம்பரை பின்னணி, தொடர்ச்சியான புகையிலைப் பழக்கம் போன்றவை ஒருவருடைய உடலிலுள்ள எலும்புகளை உறுதி இழக்கச் செய்யும் காரணிகள்.
மேற்குறிப்பிட்ட காரணிகளுள் தற்போது மிகப்பெரிய சவாலாக இருப்பது, உணவு முறைதான். அதற்குக் காரணம், தற்போதைய நவீன உணவுகளில் சேர்க்கப்படும் சேர்மானங்கள், வேதிப்பொருட்கள் மற்றும் கலப்படங்கள் உடலின் சத்துக்களை குறைப்பதுடன் அல்லாமல், உட்கிரகித்தலையும் தடுக்கிறது. அவ்வாறு பார்க்கையில், கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு உணவுப் பொருட்கள், நமது உடலில் உள்ள எலும்புகளை பலவீனமாக்குகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
சோடா பானங்கள்
சோடா பானங்கள் மற்றும் சோடா கலந்த குளிர் பானங்களில் அதிக அளவில் பாஸ்பரஸின் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலம் கலக்கப்படுகிறது. தோராயமாக 350 மில்லி லிட்டர் அளவுள்ள ஒரு குளிர் பானத்தில் 32 மில்லி கிராம் பாஸ்பாரிக் அமிலம் கலக்கப்படுகிறது. எனவே, இந்த செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா பானங்களை அதிகமாக சாப்பிடும்போது, எலும்புகளிலுள்ள கால்சியம் சத்தானது, அதிகப்படியான பாஸ்பரஸால் உறிஞ்சப்பட்டு, எலும்புகளை வலுவிழக்கச் செய்து விடுகிறது.
கால்சியம் சத்து உட்கிரகிக்கப்படுவதையும் தடுக்கிறது. இதனால் எலும்புகளுக்கு உறுதியளிக்கும் கால்சியம் சத்து கிடைக்காமல், எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. எனவே, எந்த உணவு சாப்பிட்டாலும், இறுதியில் ஏதாவது ஒரு சோடா பானம் அல்லது குளிர்பானம் குடிக்க வேண்டும் என்ற கட்டாய பழக்கத்தில் இருப்பவர்கள், வெயில் நாட்களில் எப்போதும் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்ட குளிர்பானம் குடிப்பவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். பழச்சாறு, இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி, நீர்க்காய்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதுடன், ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்துவதையும் பின்பற்ற வேண்டும்.
உப்பு
உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு தேய்மான நோய் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. இதற்குக் காரணம், உப்பில் இருக்கும் சோடியம். அதிகப்படியான சோடியம் உடலில் சேரும்போது, அதனை சமன்படுத்தும் நோக்கில் சிறுநீரகங்கள் செயல்பட்டு, சோடியத்துடன் கால்சியத்தையும் சேர்த்தே சிறுநீரில் வெளியேற்றுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு 100 mmol சோடியத்திற்கும் 1.4 mmol கால்சியம் சிறுநீரில் வெளியேறுவதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, inflammation என்று கூறப்படும் அழற்சிக்கான காரணிகளும் அதிகரித்து, எலும்பின் உறுதியைக் குறைத்து, தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது.
குறிப்பாகப் பெண்கள் இதனால் அதிகம் பாதிப்படைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. எலும்புத் தேய்மானத்திற்கு உள்ளான பெண்களிடம் நடத்திய ஆய்வில், 33 சதவிகித்தினர் உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் என்பதையும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி நடுத்தர வயதினருக்கு ஒரு நாளைக்கு 2000 மி.கிராம் சோடியம் அதாவது 5 கிராம் உப்பு போதுமானது.
ஆனால், அமெரிக்க இதய அமைப்பு (American Heart Association) ஒருவருக்கு 1500 மி.கிராம் சோடியமே போதுமானது என்று பரிந்துரைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய காலத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான உணவுப்பொருட்கள் குறிப்பாக பாக்கெட், பாட்டில், சாஷே, டின், டெட்ராபாக்கெட்டுகள் போன்றவற்றில் அதிகப்படியான உப்பு (sodium meta bi sulphite, sodium benzoate, sodium bi carbonate, sodium chloride) சேர்க்கப்பட்டிருப்பதை, அப்பொருட்களின் மூலப்பொருட்கள் பட்டியலில் காணலாம். எனவே, இவற்றைத் தவிர்த்து வீட்டு உணவுகளை அளவான உப்புடன் சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை
அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நிச்சயம் நல்லதல்ல. காரணம், அதிக சர்க்கரையும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துவிடும். இதனால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் வலி, கை கால் வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவை தொடர்ச்சியாக இருக்கிறது. அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் ஒருபுறம் சிறுநீரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துகள் வெளியேறுவதை அதிகப்படுத்துவதுடன் மறுபுறம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் எலும்புகளிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து குறைந்து, எலும்புகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அதிக சர்க்கரை சேர்த்த உணவால், ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து வைட்டமின் டி உற்பத்தி தடுக்கப்படுகிறது.
காரணம், கால்சியம் சத்தினை உட்கிரகிக்க உதவும் வைட்டமின் டி உற்பத்தி சிறுநீரகத்தில்தான் நடைபெறுகிறது. இதனால் கால்சியம் உட்கிரகித்தலும் தடைபட்டு, எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. வெளி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்கள், பசிக்கும் நேரத்தில், பேக்கரி வகை உணவுகள், பிஸ்கட் வகை உணவுகள் சர்க்கரை சேர்த்த குளிர் பானங்களை அடிக்கடி எடுத்துக்கொள்கின்றனர். அதற்குப் பதிலாக, பசிக்கும் வேளையில் இடையுணவாக, நார்ச்சத்துள்ள ஆரஞ்சு, கொய்யா, நாவல், பேரிக்காய் போன்ற பழங்கள், வெள்ளரி, குடை மிளகாய், வெண்டைக்காய் போன்ற காய்களின் சாலட், கொண்டைக்கடலை, பட்டாணி, பச்சைப்பயறு சுண்டல் போன்றவற்றை சாப்பிடலாம்.
டிரான்ஸ் கொழுப்பு
திரவ நிலையில் இருக்கும் ஏதேனும் ஒரு கொழுப்புப் பொருளுடன் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு, திட நிலை கொழுப்பாக மாற்றப்படும்போது, அதற்கு Transfat என்று பெயர். உதாரணமாக, சோளம், ஆலிவ், கடலை, எள், கடுகு, பாதாம், பனை போன்ற தாவரப் பொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்து திட நிலைப் பொருளாக மாற்றி, அதை இனிப்பு, பேக்கரி உணவுகள், ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்துதல். மற்றுமொரு உதாரணம், இந்த எண்ணெய் வகைகளுடன் தண்ணீர் சேர்த்து, கொழகொழப்பான பொருளாகத் தயாரிக்கப்படும் பொருள் மார்கரின்.
இவற்றில் இருக்கும் இந்த டிரான்ஸ் கொழுப்பு, இதயத் தமனி மற்றும் பிற ரத்தக் குழாய்களில் படிந்து, ரத்த ஓட்டத்தைத் தடுக்கும் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. பதப்படுத்தப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், கால்சியம், பாஸ்பரஸ் சமநிலை குறைந்து, எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, இவ்வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.மேற்கூறிய நான்கு உணவுக் காரணிகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரிடமும் தற்போதுள்ள உணவுப் பழக்கத்தில் இருப்பதாகும். இந்த நான்கு வகை உணவுகள்தான் இப்போது அனைவருக்கும் அன்றாட உணவாகிவிட்டது என்பதுதான் வேதனை. இவற்றுடன் மதுபானம், புகை பிடித்தல், போதை மருந்துகள் உபயோகித்தல் என்ற பழக்கங்கள் சேரும்போது, எலும்புகளின் உறுதித்தன்மை மிக விரைவாக பாதிக்கப்படுகிறது.
மது பானங்களிலுள்ள ஆல்கஹால் கல்லீரலுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கும் எதிரிதான். இதுவும் உடலில் இருந்து கால்சியம் சத்தை உறிஞ்சுவதுடன், உட்கிரகித்தலையும் தடுக்கிறது. அதேபோல், புகையில் இருக்கும் நிகோடினும், நுரையீரல் மட்டுமல்லாமல், எலும்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும், ஆக்ஸிஜன் அளவையும் குறைத்துவிடும். இது எலும்பு பலவீனம் மட்டுமல்லாமல், எலும்பு முறிவுக்கும் வழிவகுக்கிறது.
எனவே, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, உறுதியைக் குறைத்து, சல்லடையாய்த் துளைக்கும் மேற்கண்ட நான்கு வகைக்குள் அடங்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதே சமயம், எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, அன்றாட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்த கீரைகள், பந்தல் மற்றும் நாட்டுக்காய்கள், முழு தானியங்கள், எள், விதைகள், கொட்டைகள், பால் உணவுகளை சேர்ப்பது அவசியம்.