நன்றி குங்குமம் டாக்டர்
நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பைக் குறைக்கும் உணவுகளை சரியான முறையில் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை காப்பாற்ற முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. அவை என்னவென்பதைத் தெரிந்துகொள்வோம்.
பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து நிறைந்தவை. அவை இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை. எனவே அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள இதயத்தை பாதுகாக்கும். ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளு கன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்கக்கூடிய திறன் கொண்டது.
பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும், உடலில் காணப்படும் கொழுப்புப் புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது. சிவப்பு ராஸ்பெரிஸ், செர்ரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி போன்ற பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. அவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக் கூடியவை என ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, இந்த ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழங்களை டயட்டில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் அடிக்கடி உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.சரியான சரிவிகித உணவு முறையுடன் இந்த உணவுகளையும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும்போது, உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தொகுப்பு: ரிஷி