மதுரை: உணவு பாதுகாப்பு அதிகாரி பட்டியலுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை, சிவகங்கையை சேர்ந்த சந்திரசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கடந்த 2011 முதல் செயல்படுகிறது. கடந்த 21ம் தேதி தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 121 உணவு பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது.
கடந்த 2011ல் சுகாதார ஆய்வாளராக பணியில் இருந்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகளாக நியமிக்கபட்டவர்களை பணி வரன்முறை செய்யாமல், நேரடி நியமனம் கூடாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி ஏற்கனவே பணியில் உள்ளவர்களின் பணியை வரன்முறை செய்த பிறகு தான், புதிய நியமனம் செய்ய வேண்டும். எனவே, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கான பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், மனுவிற்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செயலர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆக.27க்கு தள்ளி வைத்தார்.