சென்னை: உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கும் வாட்ஸ் அப் எண் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. உணவகங்கள், சாலையோர கடைகள், தங்கும் விடுதிகள் என பல்வேறு இடங்களில் சாப்பிடும் உணவு தரமற்றதாக இருந்தால் உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்கவும், அதே நேரம் புகார்தாரரின் விவரங்களை பாதுகாக்க ஏதுவாகவும், பிரத்யேகமாக அலைபேசி எண் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் தாங்கள் சாப்பிடக்கூடிய உணவகங்களில் கெட்டுப் போன, தரமற்ற உணவுகள் இருப்பதை அறிந்தால் புகார் அளிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த வாட்ஸ் அப் எண் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள தகவல்: உணவு பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கும் வாட்ஸ் அப் எண் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. புதிய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் சேட்பாக்ஸ் விரைவில் தொடங்க உள்ளதால் தற்போது பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப் எண் செயல்பாடுகள் நிறுத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உணவின் தரம், உணவில் செய்யப்படும் கலப்படம், உணவு பாதுகாப்பு குறித்த வழிமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது குறித்து புகார் அளிக்க ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு துறை செயலி அல்லது unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.