நாள் முழுவதும் மேற்கொண்ட உடல் இயக்க செயல்பாடுகளுக்கு ஏதுவாக உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும், ஆற்றலையும் வழங்கக் கூடியதுதான் இரவு உணவு. எக்காலத்திலும் இரவு உணவைத் தவிர்ப்பது சரியல்ல. குறைந்தபட்சம் ஏதேனும் பழங்களோ அல்லது சாலட் வகைகளோ எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு தூக்கம் முதல் மறுநாள் காலைவரையிலான இடைவெளியை ஈடு செய்வதற்கு போதுமான சக்தியை உடலுக்கு கொடுக்கக் கூடியது இரவு உணவு மட்டுமல்ல சாப்பிட்ட பிறகு பின்பற்றும் பழக்க வழக்கங்களை பொறுத்தே உடல் ஆரோக்கியம் அமையும். இரவு உணவுடன் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள் சில.
செய்ய வேண்டியவை
சிறிது நடைபயிற்சி செய்யுங்கள். உணவு உட்கொண்ட பிறகு நடப்பது செரிமானம் வளர்ச்சி மாற்றத்தை அதிகரிக்கவும், டைப் – 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கவும் உதவும். ஜர்னல் ஆர்கினிக்கல் எண்டோ இரைனாலஜி மற்றும் மெட்டடாலிசம் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் மூலம் டைப் 2 -நீரிழிவு நோயாளிகள் இரவு உணவு உட் கொண்ட பிறகு பதினைந்து நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்வது ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் சாப்பிட்ட உடன் படுக்கவோ, சாய்ந்து அமரவோ கூடாது. நடக்கவே இல்லை என்றாலும் சிறிது நேரம் நேராக நிமிர்ந்து உட்கார்வது அவசியம்.
தண்ணீர் பருகுங்கள்
உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகுவது செரிமானத்திற்கு உதவுவதோடு, மலச்சிக்கலை தடுக்கவும் துனை புரியும். மலச்சிக்கல் உள்ளவர்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகும் போது குடல் இயக்கங்களில் அதிர்வுகள் ஏற்பட்டு அதன் செயல்பாடு துரிதமாகி விடும் என்பதும் ஆய்வின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளது.
பழங்கள் சாப்பிடுங்கள்
அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்பு கொண்ட உணவு பொருட்களை உட் கொள்வதற்கு பதிலாக பழங்கள் சாப்பிடுவது உடல் எடை குறைப்பை ஊக்குவிக்கவும், நாள்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தை தடுக்கவும் உதவும். அதிக கலோரி மற்றும் அதிக கொழுப்புள்ள இனிப்புகளை சாப்பிட்டவர்களை விட பழங்களை சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகமாக குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. மஞ்சள், பூண்டு சேர்த்த பால் அருந்தலாம்.
தவிர்க்க வேண்டியவை
அதிகம் சாப்பிடக் கூடாது. இரவு உணவை அளவோடு சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பு, அஜீரணக் கோளாறு மற்றும் உடல் நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். திருப்தி அடையும் வரை சாப்பிடலாம். ஆனால் வயிறு நிரம்பும் வரை சாப்பிடக் கூடாது. நேரம் கடந்து 9மணிக்கு மேல் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். போலவே தர்பூசணி, இளநீர், கிர்ணி போன்ற பழங்கள் இரவில் உண்ணக்கூடாது என சுகாதார ஆர்வலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இவை சாப்பிட்ட உணவை மேலே கொண்டு வந்து எதுக்கல் பிரச்னையை உருவாக்கும்.
மது அருந்தக்கூடாது
இரவு உணவுக்கு பிறகு மது அருந்துவது செரிமானத்தில் குறுக்கிட்டு நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்னைக்கு வழிவகுக்கும். எனவேதான் மதுவை தவிர்ப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
புகைப் பழக்கம் கூடாது
உணவு உட்கொண்ட பிறகு புகை பிடிப்பது புற்றுநோய், இதய நோய் மற்றும் பிற உடல் நலப் பிரச்னைகளை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
சாப்பிட்டதும் தூங்காதீர்கள்
சாப்பிட்ட உடனேயே தூங்குவதன் மூலம் நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்றவை ஏற்படக் கூடும். செரிமானத்திற்கு உதவும் அசவுகரியத்தை தடுக்கவும் சாப்பிட்டதும் முப்பது நிமிடங்கள் வரை தூங்குவதற்கு முன்பு காத்திருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
– அ.ப.ஜெயபால்