வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே தாய் தோசை ஊட்டிக் கொண்டிருந்தபோது, தெருநாய் கடித்து ஒன்றரை வயது ஆண் குழந்தை படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், நாயக்கன்குப்பம் மெயின் ரோடு மேல்நிலை நீர்த்தக்க தொட்டியின் அருகாமையில் வசித்து வருபவர் முத்தமிழ். இவரது மனைவி ஸ்வேதா. இந்த, தம்பதிக்கு பவிஷ் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பவிஷ் பசியால் அழுதுக்கொண்டிருந்தான். உடனே தாய் ஸ்வேதா, தோசை சுட்டு எடுத்துக்கொண்டு, மகனை வெளியே அமர வைத்து ஊட்டி கொண்டிருந்தார். அப்போது, தோசையை கையில் கொடுத்தால்தான் சாப்பிடுவேன் என பவிஷ் அடம் பிடித்ததால், அவரது தாய் பாதி தோசையை கையில் கொடுத்துள்ளார்.
இதனை, அருகாமையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தெருநாய், திடீரென பவிஷின் கையில் இருந்த தோசையை கவ்வி பிடுங்கியது. அதற்கு பிறகும், பவிஷ் முகத்தின் தாடை மற்றும் கையில் கடித்து குதறியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, ஒரு கட்டையை எடுத்து நாயை விரட்டியடித்தார். அவரையும் அந்த நாய் கடிக்க பாய்ந்தது. அவரது, சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை அடித்து விரட்டினர். பின்னர், நாய் கடித்ததில் காயமடைந்த பவிஷை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, குழந்தைகள் பிரிவில் பவிஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.