ஊட்டி ஸ்பெஷல் சாக்லேட்
நாம் அனைவருமே ஊட்டி சாக்லேட் விரும்பிகள்தான். அதுமட்டுமில்லை ஊட்டியில் கிடைக்கிற டீத்தூள், தைலம், நட்ஸ், ஜெல்லி மிட்டாய், வர்க்கி, சாக்கோ சாக்லேட் என எல்லாமே நமது ஃபேவரெட் லிஸ்டில் எப்போதுமே இருக்கும். ஊட்டிக்கு சுற்றுலா சென்றால் இதனை வாங்கிவந்து நண்பர்களுக்கு கொடுப்பது நமது சாதாரண வழக்கத்தில் ஒன்று. ஆனால் இப்போது ஊட்டியில் கிடைக்கிற இந்த அனைத்து வகையான பொருட்களையும் சென்னையிலேயே வாங்கலாம். ஆமாம், சென்னை காசி டாக்கீஸ் அருகே இருக்கிற ‘புளூ மவுண்டேன்’ என்ற ஷாப்பில் ஊட்டி ஸ்பெஷல் அனைத்துமே கிடைக்கிறது. ஆர்கானிக் முறையில் தரம் வாய்ந்ததாக இருப்பதால் ஊட்டி விரும்பிகள் இந்தக் கடைக்கு தாராளமாக விசிட் அடிக்கலாம்.
பெங்களூர் ஸ்பெஷல் பட்டர் மசாலா தோசை
தமிழகத்தில் பேப்பர் ரோஸ்ட் பேமசான காலம் ஒன்று இருந்தது. அதற்கு அடித்தபடியாக நெய் ரோஸ்ட், மசாலா ரோஸ்ட் என பல தோசைகள் அவதாரம் எடுத்தன. இப்படி சுவையிலும், மணத்திலும் பலப்பல தோசைகள் காலத்திற்கு தகுந்தபடி அனைவருக்கும் பிடித்ததாக இருந்திருக்கிறது. அந்த நேரத்தில்தான் பெங்களூர் தோசைகள் வர ஆரம்பித்தன. மிகவும் மெல்லியதாகவும், கொஞ்சம் மொறுகலாக, அதே சமயம் சுவையாகவும் கிடைத்து வந்தன. அதற்கு கொடுக்கப்படுகிற சட்னியிலும்கூட சுவை தனியாக தெரியும். இப்பொழுது அந்த பெங்களூர் தோசைகளிலும் பல வெரைட்டிகள் வந்தபோதிலும் பட்டர் மசாலா தோசை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. இந்த பெங்களூர் ஸ்பெஷல் தோசையை சாப்பிட வேண்டுமென்றால் அண்ணாநகரில் இருக்கிற உபவிகார் ஹோட்டல் நல்ல சாய்ஸ்.
ஜாஃப்ரானி டீ
ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தேநீர் குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஒரே மாதிரியான தேநீரை அதுவும் எல்லா இடங்களிலும் குடிப்பதற்கு பதிலாக வித்தியாசமான தேநீரைக் குடிக்க வேண்டும் என பலருக்கு தோன்றும். அவ்வாறு நினைப்பவர்கள் துபாய் ஸ்பெஷல் ஜாஃப்ரானி டீ குடித்து மகிழலாம். ஏற்கனவே, ரோஸ் டீ, பர்பில் டீ, மில்லட் டீ என பல வகையான டீக்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் போலவே ஜாஃப்ரானி டீயும் சுவையில் புதிதாக இருக்கும். இதை மவுன்ட் ரோட்டில் இருக்கிற புஹாரி ஹோட்டலில் குங்குமப்பூ மிதக்க சூடாக தருகிறார்கள். இந்த டீயை பன் பட்டரோடு சேர்ந்து சாப்பிடுவதற்கு டீ பிரியர்கள் முந்துகிறார்கள்.