ப்ரூட் தேநீர்
மனிதர்களில் முக்கால்வாசி பேர் டீ விரும்பிகள்தான். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தேநீராவது குடித்தாக வேண்டும். இல்லையென்றால் அன்றைய நாள் இனிக்காது. சிலர் நல்ல டீ குடிப்பதற்காக பல கிலோ மீட்டர் பயணம் செல்லும் பழக்கமெல்லாம் நடைமுறையில் இருக்கிறது. அப்படி தேநீர் பிரியர்களுக்காகவே பிரத்யேகமான கடைதான் சோழிங்கநல்லூரில் உள்ள ‘சாய் ஹப்பாட்’. குங்குமப்பூ டீ, ரோஸ் டீ, சுலைமானி, ஃபுரூட்ஸ் டீ என நாற்பதுக்கும் மேலான வெரைட்டிகளில் தேநீர் தருகிறார்கள். இங்கு பைனாப்பில் மற்றும் திராட்சை டீ மிகவும் ஸ்பெஷல். மாலை ஐந்து மணி தொடங்கி காலை மூன்று மணி வரை செயல்படுகிற இந்தக் கடை பலரது ஃபேவரைட் இடமாகவும் இருக்கிறது.
ஒரு டீ சொல்லுங்க சார்!
ஐஸ்கிரீம் தாளி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஃபேவரைட்டான ஒன்று என்றால் அது ஐஸ்கிரீம்தான். உணவு சாப்பிட்டு முடித்தவுடன் கடைசியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டால்தான் உணவு சாப்பிட்ட திருப்தியே கிடைக்கும் பலருக்கு. சிறு வயதில் சேமியா ஐஸ், பால் ஐஸ் என குச்சி வைத்த ஐஸ் சாப்பிட்டுத்தான் நாம் வளர்ந்திருக்கிறோம். இப்போது ஐஸ்கிரீமுக்காகவே பல கடைகள் திறக்கப்பட்டு விதவிதமான பெயர்களில் ஐஸ்கிரீமை வழங்கி வருகிறார்கள். அப்படி ஐஸ்கிரீமில் பல வெரைட்டி கொடுப்பது மட்டுமில்லாமல் ஐஸ்கிரீம் தாளியை கொண்டுவந்து அதில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம்களை கொடுத்து வரும் கடைதான் முகப்பேரில் உள்ள ‘ஐஸ்கிரீம் ஒர்க்ஸ்’. விதவிதமான ஃப்ளேவர்களில் பல புதியவகை ஐஸ்கிரீம்களை அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த கடை நிச்சயம் உங்கள் மனதுக்கும், வயிற்றுக்கும் குளுமை தரும்.
குளுமை… குளுமை… கூல்… கூல்!
சிறுதானிய புட்டு
மாறி வரும் உணவுப்பழக்கத்தினால் தற்போது புதுப்புது நோய்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கிவிட்டன. சிறுவயதினரையும் இதய நோய், சர்க்கரை, ரத்த அழுத்தம் என பல நோய்கள் துரத்தி வருகின்றன. இதனால் விழிப்படைந்த பலர் தற்போது நமது பாரம்பரிய உணவுகளைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அதுபோல் செல்ல விரும்புகிறவர்களுக்கு சிறுதானியங்களில் இருந்து செய்யப்படும் புட்டு வகைகள் நல்ல சாய்ஸ். இத்தகைய புட்டு வகைகளை விருகம்பாக்கம் வெங்கடேசா நகர் பிரதான சாலையில் உள்ள புட்டுக்கடையில் காலையிலும், மாலையிலும் சுடச்சுட ஒரு பிடி பிடிக்கலாம். புட்டு வகைகளுக்கு கடலைக்கறி போன்ற சைட் டிஷ்களும் உண்டு. ஒரு பிடி பிடிங்க.