ஆஸ்திரேலிய உணவுகளில் ஒன்றுதான் க்ரொசன்ட். இது உலகம் முழுவதும் பல நாடுகளில் காலை உணவாக உட்கொள்ளப்படுகிறது. அந்தளவுக்கு பிரபலம் அடைந்த இந்த க்ரொசன்ட் ஆஸ்திரேலியாவில் 13ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகெங்கும் கிடைக்கும் ப்ரெட் வகைகளிலே இந்த க்ரொசன்ட் தயாரிப்பது மிகவும் கடினம் என்கிறார்கள். ஏனென்றால், இந்த க்ரொசன்ட் மல்டி லேயர் வடிவத்தில் தயாரிப்பார்கள். அதாவது மாவை கேக் பதத்திற்கு தயார் செய்து பட்டர் சேர்த்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி பலமுறை உருட்டி, மடித்து, மெல்லிய தாள் போல அடுக்கி தயாரிப்பார்கள். இப்போது இந்த க்ரொசன்ட் சென்னையில் பல அயல்நாட்டு உணவகங்களில் கிடைத்து வருகிறது. அதில் சென்னை ஆர்.ஏ புரத்தில் இருக்கிற ‘தி டஸ்கன் டேபிள்’ என்கிற உணவகத்தில் பல வெரைட்டியான க்ரொசன்ட் கிடைக்கிறது.
கறி இட்லி
நம்மில் பலர் இட்லியை ஒருவேளை உணவாகவாது சாப்பிட்டு வருகிறோம். அப்படிப்பட்ட இட்லியில் பல வகையான வெரைட்டிகள் பல இடங்களில் கிடைக்கிறது. பொடி இட்லி, தட்டு இட்லி, மசாலா இட்லி, சாம்பார் இட்லி என பல வகையான இட்லிகள் பல உணவகங்களில் கிடைக்கின்றன. ஆனால், கறி இட்லி சென்னையில் சில உணவகங்களில்தான் கிடைக்கிறது. இட்லிக்குள் சிக்கனோ, மட்டனோ வைத்து அதை வேகவைத்துக் கொடுப்பார்கள். அசைவப் பிரியர்களுக்கு இந்த இட்லி புதுவகையான சுவையில் இருக்கும். இப்படிப்பட்ட இட்லியை அதிகாலை நான்கு மணியில் இருந்தே கொடுத்து வருகிறது அம்பத்தூரில் இயங்கி வரும் கண்ணன் உணவகம். உணவுப் பிரியர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.
வான்கோழி பிரியாணி
சென்னையில் சிக்கன், மட்டன் பிரியாணிகள் எல்லாத் தெருக்களில் இருக்கிற உணவகங்களில் கிடைக்கும். ஆனால், வான்கோழி பிரியாணி ஒரு சில உணவகங்களில்தான் கிடைக்கிறது. அப்படி பல வருடங்களாக வான்கோழி பிரியாணி கொடுத்து வரும் உணவகம்தான் சென்னை சூளையில் இருக்கிற இராமலிங்கா விலாஸ். இரண்டு தலைமுறை தாண்டியும் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் ஆரம்பத்தில் இருந்தே வான்கோழியில் பல ரெசிபிகள் கொடுத்து அசத்துகிறார்கள். ஒரு பிரியாணி வாங்கினாலே இரண்டு நபர் சாப்பிடும் அளவுக்கு தாராளமாக தருகிறார்கள். சுவையிலும் அசத்தலாக இருக்கிற இந்த பிரியாணியை அந்தப் பகுதி மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.