நன்றி குங்குமம் டாக்டர்‘‘நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. இவை உணவு உண்டபின், உணவு முறிவு ஏற்பட்டு சிறுதுகள்களாகி செரிமானமான பின் நம் உடலுக்கு சக்தியளிக்கிறது. இது பொதுவான செரிமான முறையாகும். ஆனால், உடலில் உணவு சகிப்பின்மை உடையவர்களுக்கு உணவுமுறிவு ஆகாமல் செரிமானமாவதைத் தடுத்து உடலுக்கு உபாதையளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்’’ என்கிறார் உணவியல் நிபுணரான மேகலா ஜெயக்குமார். உணவு சகிப்பின்மையின் வகைகள், நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி தொடர்ந்து விளக்குகிறார்.உணவு முறிவிற்கு நொதிகள்(Enzymes)தான் காரணம். இந்த நொதிகள் குறைபாட்டினால் உணவு செரிமானமாகாமல் உணவு சரியாக உறிஞ்சப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு வகையான உணவிற்கும் அதற்குண்டான நொதிகள் செயல்பட்டு முழுமையடையச் செய்கிறது. இந்தத் தன்மையைதான் உணவு சகிப்பின்மை என்கிறோம். உணவு சகிப்பின்மை, ஒவ்வாமையிலிருந்து மாறுபட்ட ஒன்று. சகிப்பின்மையானது, செரிமான மண்டலத்தோடு தொடர்புடையது. ஒவ்வாமை என்பது நோய் எதிர்ப்புச் சக்தியோடு தொடர்புடையது. உணவு சரியாக முறியாமல் வயிற்றிலேயே தங்கிவிட்டால் அங்கு வாழும் பாக்டீரியாக்கள் அந்த உணவை உட்கொண்டு, நமக்கு அசௌகரியமான அறிகுறிகளை தோற்றுவிக்கிறது.பொதுவான அறிகுறிகள் ஒற்றைத் தலைவலி, பேதி, குமட்டல், தூக்கமின்மை, பதட்டம், குறைந்த ரத்த அழுத்தம்; மற்றும் வேகமான இதயத்துடிப்பு போன்றவை ஆகும். உணவு சகிப்பின்மையானது சிறியவர் முதல் பெரியவர் வரை எந்த வயதினருக்கும் வரலாம். இதன் அறிகுறியை வைத்து எந்த வகையான உணவு சகிப்பின்மை என கண்டறிவது கடினம்.அது மட்டுமில்லாமல் உணவு உட்கொண்ட சில மணி நேரங்கள் கழித்துத்தான் நமக்கு அறிகுறி தெரிய ஆரம்பிக்கும். கொஞ்சம் சிரமப்பட்டு தான் இதை வகைப்படுத்த முடியும்.பொதுவாக உணவு சகிப்பின்மை அந்த வகை உணவின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.பால் வகை (Dairy) Lactose Intoleranceஇது பாலில் உள்ள சர்க்கரையை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் அதற்குண்டான நொதியின் (lactase) குறைபாட்டால் சகிப்பின்மையை உண்டாக்குகிறது. இதைப் பொதுவாக Lactose Intolerance என்று அழைப்பர். ஆகையால் பால், தயிர், பாலேடு, பனீர் போன்ற உணவு வகைகளையும் தவிர்த்து விட வேண்டும். குமட்டல், வாய்வுத் தொல்லை, வயிறு உப்புசம், பேதி ஆகிய அசௌகரிய அறிகுறிகளை ஏற்படுத்தும்.Gluten Intolerance-க்களுடன் சகிப்பின்மை இது ஒரு வகையான புரதம். கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்றவற்றில் காணப்படும். இதன் மாவிற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிப்பது இந்த குளூட்டன் ஆகும். உடல் சோர்வு தலைவலி, எக்ஸிமா எனப்படும் தோல் தடிமன், வயிற்றுவலி ஆகியவை ஏற்படும் Caffeine சகிப்பின்மைஇது ஒரு கசப்புத்தன்மை கொண்ட ரசாயனப் பொருளினால் ஏற்படுகிறது. இவை டீ, காபி மற்றும் சக்தி அளிக்கக்கூடிய பானங்களில்(Energy Drinks) காணப்படுகிறது. ஒரு சிலருக்கு இதன் அளவு கொஞ்சம் அதிகமாகிவிட்டாலே பதற்றம், வேகமான இதயத்துடிப்பு, தூக்கமின்மை வரும். இந்த ரசாயனப் பொருள் உடலுக்கு ஊட்டமளிப்பதற்குத் தேவையான ஊக்கியாக (Stimulant) இருக்கிறது.மேலும், சாலிஸிலேட் மற்றும் ஹிஸ்டமின் வகைகள் உணவு பாதுகாப்பிற்காகவும், பதப்படுத்துவதற்காகவும் இயற்கையிலேயே அமையப் பெற்றது. இவற்றின் நொதி குறைபாட்டினால் தலைவலி, கை, கால் வீக்கம், உண்டாகிறது. இவ்வகையான சாலிஸிலேட் பழங்கள், காய்கறிகளில் காணப்படுகிறது. ஹிஸ்டமின் என்பது பதப்படுத்தப்பட்ட மாமிசம், உலர் பழங்கள், புளிக்க வைத்த உணவுகள், சிட்ரஸ் பழங்கள் ஆகியவற்றில் இருக்கிறது. இவற்றை உட்கொள்ளும் போது அதற்குண்டான Dramamine oxidase எனும் நொதி குறைபாட்டால் செரிமானமாகாமல் வயிறு பிடிப்பு, அரிப்பு, தலைவலி ஆகியவற்றை அறிகுறியாக காண்பிக்கிறது.இத்தகைய உணவு சகிப்பின்மையை அவரவரின் சொந்த அனுபவத்தாலேயே உணர்ந்து கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். முன்பே சொன்னது போல் உணவு உண்ட பிறகு சில மணி நேரங்கள் கழித்தே அறிகுறிகள் தென்படுவதால், அவரவர் உணவு நாட்குறிப்பு ஒன்றை வைத்துக்கொண்டு என்னென்ன உணவு வகைகள் எந்தெந்த நாட்களில் எடுத்துக் கொண்டோம் என்பதை கவனத்தில் வைத்து அந்த உணவு வகைகளை ஓரிரு வாரம் தவிர்த்துவிட்டு, பிற உணவுகளை உட்கொள்ளலாம். அதன் பின்னர் மீண்டும் சிறு சிறு அளவாக உணவில் சேர்த்துக் கொண்டு அதற்கான அறிகுறிகளை குறித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு உணவின் சகிப்பின்மையை கண்டறியலாம். தவிர்க்கவும் முடியும். உணவு சகிப்பின்மை காரணமாக நாம் பால், தயிர், பாலேடு, பால் கட்டி(Paneer) உலர்ந்த பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பாதுகாக்கப்பட்ட உணவு வகைகள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல் கோதுமையினால் செய்யப்பட்ட மாவு வகைகள், பிெரட், பிஸ்கட்டுகள், பலகாரங்கள் இவற்றை தவிர்க்க வேண்டும்.இந்த மாதிரியான ஒதுக்கிய உணவினால் நமக்கு சத்து அளிக்கக்கூடிய கால்சியம், புரதம் மற்றும் ஊக்கி வகைகள் நமக்கு தொடர்ந்து கிடைப்பதற்கு அதற்கு இணையான உணவு வகைகளை தேர்தெடுத்து உண்ண வேண்டும். எடுத்துக்காட்டாக பாலிலிருந்து கிடைக்கும் புரதம் மற்றும் கால்சியம் கிடைப்பதற்கு அதற்குத் தேவையான அல்லது மாற்றுப் பொருளாக கேழ்வரகு, சோயா பால் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.அதில் செய்யப்பட்ட பால் கட்டி ஆகியவற்றை உண்டு மகிழலாம். இவ்விதமாக அனைத்து விதமான உணவுக்கும் மாற்று ஏதேனும் கண்டறிந்து கொள்ள வேண்டும். இதற்கு நல்ல ஊட்டச்சத்து நிபுணரை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி நாம் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைத் தவிர்த்து, சேர்க்க வேண்டிய உணவு வகைகளைச் சேர்த்து ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவுமுறையை பின்பற்றி நலமாக வாழலாம்.இன்னொரு முறையாக நொதியின் குறைபாட்டை நீக்குவதற்கான துணை உணவு வகைகளையோ அல்லது அதன் ஊக்கிகளையோ (enzyme activator) எடுத்துக் கொள்ளலாம். ‘முதலில் நாம் நம் அறிகுறிகளை வைத்து நமது குடும்ப மருத்துவர் அல்லது பொது நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.– இந்துமதி
Food Intolorence சகிக்க முடியலையா…
previous post