திருமலை: தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை பின்பற்றி தெலங்கானாவிலும் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று துவங்கப்பட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பசியுடன் கல்வி கற்க கூடாது. அவர்கள் வயிறு நிறைந்து மனநிறைவோடு கல்வி கற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டத்துக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானாவில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகனும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான கே.டி. ராமாராவ் தொடங்கி வைத்தார். மாநிலத்தின் 119 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு பள்ளியில் இந்த திட்டத்தை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்களுடன் மாணவர்களுக்கு காலை உணவு நேற்று வழங்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 27,147 பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். பள்ளி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. ஐதரபாத், ரங்காரெட்டி, மேட்சல்- மல்காஜிகிரி, சங்கரெட்டி மற்றும் மகபூப்நகர் மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளில், காலை உணவு அக்ஷய பத்திரம் அமைப்பு மூலமும், மற்ற மாவட்டங்களில் மதிய உணவு பணியாளர்களாலும் வழங்கப்பட உள்ளது.