Saturday, June 14, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு FND…செயல்பாட்டு நரம்பியல் கோளாறு அறிவோம்!

FND…செயல்பாட்டு நரம்பியல் கோளாறு அறிவோம்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

நரம்பியல் மற்றும் மனநல நிபுணர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்

மனித மூளை இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகப் பெரிய சக்தி. தன்னைத் தான் என்று உணரும் ஓர் அற்புத ஆற்றல் இத்தனை கோடி பருப்பொருட்களில் மனித மூளைக்கு மட்டுமே உண்டு. அத்தகைய நம்முடைய மூளை மனதைச் சந்திக்கும் இடம் மிக நுட்பமானது. இங்கு ஏற்படும் கோளாறுதான் செயல்பாட்டு நரம்பியல் கோளாறு எனப்படும் Functional Neurological Disroders (FDS). சமீப காலங்களில் பெருமளவில் கவனத்தை ஈர்த்த பல தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருவது ’செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகள்’. இதை ஆங்கிலத்தில் ‘Functional Neurological Disorders’ [FND] என்று அழைக்கிறார்கள்.

FND என்பது என்ன?

FND என்பது மூளை அல்லது நரம்புகளுக்கு எந்தவிதமான சேதமும் இல்லாத நிலையில், நரம்பு மண்டல செயலிழப்பின் அறிகுறிகள் காணப்படும் ஒரு நிலையாகும். இந்த கோளாறைப் பொறுத்த வரையில் உண்மையான பிரச்சினை என்னவென்றால், மூளை நம்முடைய உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்களை எவ்வாறு பெறுகிறது, எவ்வாறு தகவல்களை அனுப்புகிறது என்பதில்தான் இருக்கிறது. மூளை தகவல்களை சரிவர பெறாத போதோ, தகவலை அனுப்பாத போதோ, நம்முடைய நரம்பு மண்டலம் சரியாக செயல்படுவதில்லை. இதனால் FND பாதிப்பு ஏற்படுகிறது.

FND அறிகுறிகள் என்ன?

கால்-கைகளில் பலவீனம், பக்கவாதம் (paralysis), வலிப்பு [seizures], நடுக்கம் [tremors], திடீரென உடல் பகுதி தூக்கிப் போடுதல் (jerks) போன்றவை FND-ன் அறிகுறிகளாகும். மேலும், நரம்பு மண்டல சேதத்தைப் போன்று இருக்கும் இதர அறிகுறிகளும் FND-களின் முக்கிய அறிகுறிகளாகும். அடுத்து, பேசுவதில் தடுமாற்றம், சோர்வு, கால்-கை பலவீனம், நினைவாற்றல் குறைபாடு மற்றும் கவனக் குறைபாடுகள் போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம்.

இவை மிகவும் பரவலாகக் காணப்படும் நிலைகளாகும். உண்மையில், தலைவலிக்கு அடுத்தபடியாக காணப்படும் இரண்டாவது பொதுவான நரம்பியல் கோளாறுகள் FND ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. FND பாதிப்புடன் இருப்பதாகப் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டவர்கள், பதற்றம், மன அழுத்தம், திடீரென பயத்தினால் பீதியடைவது, மனச்சோர்வு மற்றும் போஸ்ட் ட்ரொமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர் எனப்படும் (PTSD – Post Traumatic Stress Disorder) போன்றவற்றின் அறிகுறிகளுடனும் இருக்கலாம்.

FND பாதிப்புக்கான முக்கிய காரணம் என்ன?

எந்தவொரு நோயையும் போலவே, FND-களுக்கான காரணங்களைக் கண்டறிவது, அது குறித்த ஒரு ஆழ்ந்த புரிதலுக்கு மிக மிக அவசியமாகும். FND-கள் முக்கியமாக நம்முடைய மனதில் உண்டாகும் தாக்கத்தின் காரணமாக, மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படுகின்றன. அதனால்தான் இவை நியூரோப்சைக்கியாட்ரிக் கோளாறுகள் [neuropsychiatric disorders] என்றும் அழைக்கப்படுகின்றன.

FND பாதிப்பு யார் யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

ஏற்கெனவே மனநலப் பிரச்சனைகள் அல்லது நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள், அதிக மனஅழுத்தம் கொண்ட வாழ்க்கை முறையில் வாழ்பவர்கள் அல்லது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட துஷ்பிரயோக அனுபவம் உள்ளவர்கள் அல்லது அதிர்ச்சியின் பாதிப்புகள் உள்ளவர்கள் FND-க்கு ஆளாகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இது போன்ற நிலையானது, 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளில் அரிதாகவும், 50 வயதுக்குக் குறைவான பெண்களில் அதிகமாகவும், இருக்கிறது. ஆனால் 50 வயதுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சம அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

FND பாதிப்பை எப்படி கண்டறிவது?

FND பாதிப்பு இருக்கிறதா என்பதை தேர்ச்சிப் பெற்ற நரம்பியல் நிபுணரால், அறிகுறிகளின் விளக்கம் [symptom description], நரம்பியல் பரிசோதனை [neurological examination], மற்றும் CT அல்லது MRI போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிப்பட்டு வருகிறது.

அதேநேரம், பரிசோதனைகளின் தேவையை நம்பி இருக்காமல், அறிகுறிகள் குறித்த விரிவான, தெளிவான விளக்கங்கள், நரம்பு தொடர்பான பரிசோதனைகளின் மூலம் செயல்பாட்டு நரம்பியல் கோளாறுகளையும் பிற நரம்பியல் கோளாறுகளையும் நரம்பியல் நிபுணரால் வேறுபடுத்தி அறியமுடியும். செயல்பாட்டு நரம்பியல் அறிகுறிகள் உண்மையானவை. இவை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் துன்பத்தையும் கடும் சிரமத்தையும் ஏற்படுத்துகின்றன. அதேபோல் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவும் கூடும்.

FND குணப்படுத்தக் கூடியதா?

FND-கள் சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்தக்கூடியவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கோளாறுகளின் அறிகுறிகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பக்கூடியவை. FND-யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்ற நரம்பியல் கோளாறுகளைப் போல் நரம்பு மண்டலத்தில் குறிப்பிடும்படியான சேதம் எதுவும் இல்லாத காரணங்களினால், அவர்கள் முழுமையாக குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

FND என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன?

உளவியல் சிகிச்சை [psychotherapy], குறிப்பாக அறிவாற்றல் சார்ந்த பழக்கவழக்கங்களுக்கான சிகிச்சை [Cognitive Behavioural Therapy] மற்றும் சில சந்தர்ப்பங்களில், மருந்துகள் உட்கொள்வது என இவையனைத்தையும் ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கும் போது நேர்மறையான பலன்களை அளிக்கும். அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும் சந்தர்ப்பங்களில், நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகள் உருவாவதற்கு காரணமாக இருக்கும் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை நிதானமாக ஆய்வுசெய்து, அவற்றை மாற்றியமைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உளவியல் சிகிச்சை [Psychotherap] அல்லது அறிவாற்றல் சார்ந்த பழக்கவழக்கங்களுக்கான சிகிச்சை [Cognitive Behavioural Therapy], FND பாதிப்புள்ள நோயாளிகளுக்கு மிகவும் நல்ல பலன்களை அளிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகளிடம் காணப்படும் அறிகுறிகளைப் பொறுத்து பேச்சு சிகிச்சை [speech therapy] மற்றும் பிசியோதெரபியும் சிகிச்சைகளின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படலாம்.

FND நோயாளிகள் செய்ய வேண்டியவை என்ன?

FND பற்றி அதனால் பாதிப்படைந்திருக்கும் நோயாளிகள் அறிந்துகொள்வது, அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முதல் படி என்பதை உணர்ந்து கொள்வது நல்ல பலன்களை அளிக்கும். நோயாளிகள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவை வெவ்வேறு வழிகளில் எப்படி தங்களை பாதிக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நோயாளிகள் தங்களது செயல்பாடுகளை கவனத்தில்கொண்டு செயல்படுவது மிக மிக அவசியம். . எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய செயல்களை, உணர்வுகளை உச்சமடையவோ அல்லது நீச்சமடையவோ அல்லது அவை மாறி மாறி சுழற்சி [‘boom or bust’ cycles] அடைவது போல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு அவர்கள் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஒரே நேரத்தில் மளமளவென முடிக்காமல், ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, குறிப்பிட்ட இடைவெளிகளில் நிதானமாக செய்வது அவர்களின் உடலுக்கும், மனதிற்கும் நல்லது. இவையிரண்டும் இயல்பு நிலைக்கு மீண்டு வருவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும்.

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கும் பழக்கத்தை பின்பற்றுவதும் மிக முக்கியம். அதிகம் மெனக்கெடாமல் பண்ணக்கூடிய யோகா, மன அழுத்தம் வரவிடாமல் பார்த்துக் கொள்வது என இந்த இரண்டு அம்சங்களும் FNDs-ஐ நிர்வகிப்பதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக இருக்கின்றன. இவை இரண்டும் நோயாளிகள் FND பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi