நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர்மிலன், ஃப்ளுமினென்ஸ் எப்சி அணிகள் அபார வெற்றி பெற்றன. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் உலகப் புகழ் பெற்ற அணிகள் இடையிலான, ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு, ரூ. 1080 கோடி பரிசுத் தொகை கிடைக்கும்.
இந்நிலையில், நேற்று நடந்த லீக் சுற்றுப் போட்டி ஒன்றில் இன்டர்மிலன் – உராவா ரெட் டைமண்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியின் 11வது நிமிடத்தில் உராவா அணியின் ரையோமா வாலனபி கோலடித்தார். அதன் பின் நீண்ட நேரம் இரு அணியினராலும் கோல் அடிக்க முடியாத சூழல் காணப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடிய இன்டர்மிலன் அணியின் லாடரோ மார்டினஸ், வாலன்டின் கார்போனி அடுத்தடுத்து கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஃப்ளுமினென்ஸ் எப்சி அணியும், உல்சான் எச்டி எப்சி அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த அப்போட்டியில், ஃப்ளுமினென்ஸ் அணியின் ஜான் அரியாஸ், நொமாடோ, ஜூவான் பாப்ளோ பிரெய்டஸ், கேனோ தலா ஒரு கோல் அடித்தனர். உல்சான் அணியின் லீ ஜின் ஹியுன், உம் வான் சாங் தலா ஒரு கோலடித்தனர். அதனால், 4-2 என்ற கோல் கணக்கில் ஃப்ளுமினென்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.