திருச்சி: திருச்சியில் பூக்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் பூ சந்தைக்கு பெங்களூரு, ஒசூர் பகுதிகளில் இருந்து ரோஜா பூக்களும், திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு பகுதிகளிலிருந்து மல்லிகை பூக்களும், திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரளி பூவும், பெரம்பலூரிலிருந்து சம்பங்கி பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது, கடும் பனிப்பொழிவு நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.300க்கு விற்ற ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ரூ.500க்கு விற்ற கனகாம்பரம் ரூ.1000க்கும், ரூ.400க்கு விற்ற முல்லை ரூ.800க்கும், ரூ.400க்கு விற்ற ஜாதி மல்லி ரூ.700க்கும், ரூ.100க்கு விற்ற அரளி பூ ரூ.250க்கும், ரூ. 80க்கு விற்ற சாமந்தி ரூ.180க்கும், ரூ.60க்கு விற்ற சம்பங்கி ரூ.100க்கும், ரூ.80க்கு விற்ற பெங்களூரு ரோஸ் ரூ.150க்கும், ரூ.80க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.130க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், பனிப்பொழிவு காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது என்றனர்.