ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி கடந்த 10ம் தேதி துவங்கியது. இதையொட்டி ஒரு லட்சம் காரனேசன் மலர்களை கொண்டு டிஸ்னி கேசில் அலங்காரம் மற்றும் மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், டொனால்ட் டக் அலங்காரம் அமைக்கப்பட்டது. நீலகிரி மலை ரயில் அலங்காரமும் அமைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக காளான், கித்தார், தர்பூசணி, ஆக்டோபஸ் வடிவில் மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டன.
விடுமுறை நாளான நேற்று மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்தனர். கடந்த 10 நாட்களில் 1 லட்சத்து 67 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு சென்றுள்ளனர். மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. மலர் கண்காட்சியுடன் ஊட்டி ரோஜா பூங்காவில் 19வது ரோஜா கண்காட்சி துவங்கியது. வண்ண ரோஜா மலர்களை கொண்டு யானை, காட்டுமாடு, மான், நீலகிரி தார், புலி, பாண்டா, கரடி, ஆந்தை, புறா போன்ற வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன.
இவற்றை 75 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர். நேற்றுடன் கண்காட்சி நிறைவடைந்தது. சிறந்த அரங்குகள் மற்றும் தோட்டம் அமைத்தவர்களுக்கு பாிசுகள் வழங்கப்பட்டன. ரோஜா கண்காட்சி நிறைவடைந்தாலும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ மேலும் சில நாட்களுக்கு யானை உள்ளிட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படும் என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.