Tuesday, July 15, 2025
Home மகளிர்சிறப்பு கட்டுரைகள் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற தமிழக செவிலியர்கள்!

ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற தமிழக செவிலியர்கள்!

by Lavanya

நன்றி குங்குமம் தோழி

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கடவுளாக மருத்துவர்கள் இருந்தால், அவர்களை கவனித்துக் கொள்ளும் தேவதைகள்தான் செவிலியர்கள். இவர்களின் சேவை அலாதியானது. நேரம் பார்க்காமல் ஒரு நோயாளியின் அனைத்து நலன்களையும் உடனிருந்து கவனித்துக் கொள்பவர்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுதும் சிறப்பாக செயல்பட்ட 15 செவிலியர்களை தேர்ந்தெடுத்து ‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்ற விருதினை குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்து வருகிறார். இந்தாண்டு தமிழ்நாட்டில் இருந்து அலமேலு மற்றும் மணிமொழி இரு செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அலமேலு மங்கையர்க்கரசி தன்னைப் பற்றி மனம் திறக்கிறார்.

‘‘எனக்கு சொந்த ஊர் ராஜபாளையம் அருகே இருக்கும் சேத்தூர். அப்பா விவசாயி. அம்மா மாற்றுத்திறனாளி என்றாலும், வீட்டுப் பொறுப்பு முழுதும் அவரின் கண்ட்ரோல்தான். அண்ணன், தம்பி, தங்கை என அனைவரும் படித்துவிட்டு நல்ல வேலையில் இருக்கிறார்கள். நாங்க படித்து நல்ல நிலையில் இருக்க என் பெற்றோர்தான் காரணம். அவங்களுக்கு படிப்பின் முக்கியத்துவம் தெரியும் என்பதால், நாங்க விரும்பிய துறையில் எங்களை படிக்க வைத்தாங்க.

நான் படிப்பு முடிச்ச கையோடு, கோவையில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு 2008ல் அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி இருந்ததால், அதற்கு விண்ணப்பித்தேன். தேர்வும் ஆனேன். திருவண்ணாமலை செங்கம் வட்டத்தில், அரட்டவாடி கிராமத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தேன்’’ என்றவர் அங்கு அவரின் பணி குறித்து விவரித்தார்.

‘‘அரசு சுகாதார நிலையம் என்பதால், மதியம் வரைதான் செயல்படும். அரட்டவாடி மலைப்பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரமாட்டார்கள். பிரசவம் கூட வீட்டில்தான் பார்த்துக் கொள்வார்கள். மருத்துவர் மேற்பார்வையில் செவிலியர்கள் உதவியுடன் குழந்தை பெறுவது தாய்க்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது. மருத்துவமும் இலவசம் என்று அவர்களை நேரில் சந்தித்து கொஞ்சம் கொஞ்சமாக புரியவைத்தோம்.

மேலும் இவர்களுக்காகவே சுகாதார நிலையம் 24 மணி நேரம் வரை செயல்படும் என்று தெரிவித்தோம். நான் 12 மணி நேரம், என்னுடன் இருக்கும் சக செவிலியர் 12 மணி நேரம் என்று சுகாதார நிலையத்தில் பணியில் எப்போதும் இருந்தோம். இரவு நேரத்திலும் சுகாதார நிலையத்திற்கு வந்தால் கவனிக்க ஆள் இருப்பதை புரிந்துகொண்ட அந்த கிராம மக்களுக்கு சுகாதார நிலையம் மேல் ஒரு நம்பிக்கை வந்தது. பிரசவத்திற்குப் பெண்கள் இங்கு வர ஆரம்பித்தார்கள். மேலும் சாதாரண காய்ச்சல், சளி போன்ற சுகவீனங்களுக்கும் எங்களை நாடி வந்தார்கள்.

திருமணத்திற்குப் பிறகு விருதுநகர் மாவட்டம் குன்னூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றல் கிடைத்தது. அங்கே, சிசேரியன் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ேபான்றவற்றுக்காக அறுவை சிகிச்சை மையம் ஒன்றைத் தொடங்கினோம். மேலும் மருத்துவரின் கண்காணிப்பில் தரமான சிகிச்சையும் வழங்கி வந்ததால், எங்களின் சுகாதார நிலையத்திற்கு ISO தரச்சான்றிதழ் கிடைத்தது. ஒரு வருடத்திற்கு பிறகு எனக்கு ஊட்டி அருகே கோத்தகிரிக்கு மாற்றல் கிடைத்தது. அப்போது தான் எனக்கு குழந்தை பிறந்திருந்ததால், அவளை என் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு நான் கோத்தகிரிக்கு சென்றேன். என் அம்மாதான் என் இரண்டு மகள்களையும் வளர்த்தார்கள்.

ஒருநாள் உதவி மருத்துவ இயக்குனர் பந்தலூரில் குடும்பக்கட்டுப்பாடு முகாம் நடக்கிறது. அங்கு என்னால் போக முடியுமா? என்று கேட்டார். பந்தலூர் கோத்தகிரியிலிருந்து ஏழு மணி நேரப் பயணம். நான் இரண்டு வாரம் அங்கு சென்றேன். அங்கு குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் பெண்களை ஏழு நாட்கள் முகாமில் வைத்து கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மருந்து போட்டு, தையல் பிரித்து, அவர்கள் நலமாகும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த வேலையை நான் திருப்திகரமாக செய்ததால், உதவி இயக்குனரின் பாராட்டையும் பெற்றேன். அதனைத் தொடர்ந்து 2013ல் வில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் பெற்றேன்.

இது நான் பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களைவிட பல மடங்கு பெரியது. இங்கு பிரசவம் பார்ப்பதில், குடும்பக் கட்டுப்பாடு செய்வதில் மாவட்ட அளவில் சாதனை புரிந்தோம். அனைத்து மருத்துவ வசதிகளும் இங்குண்டு. குறை இருந்தாலும், தலைமை மருத்துவர் உடனே சரி செய்திடுவார். அவரின் வழிகாட்டலில், மருத்துவமனையையும் தாண்டி எங்களின் சேவை விரிவடைந்தது. சிறைச் சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தோம். அடுத்து காய்கறி அங்காடியில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிப்பது பற்றி கூறினோம்.

காசநோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு சுற்றுப்புற தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு செய்தோம்’’ என்றவர், தன் மருத்துவமனையின் சார்பில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் மூலம் காணொளிகளை பதிவேற்றம் செய்து, நோயாளிகள், இளநிலை செவிலியர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் ஆரோக்கியம் குறித்து சேனல் மூலம் விவரித்து வரும் அலமேலுவை தொடர்ந்தார் மணி மொழி.

இவரும், ‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது பெற்ற மற்றொரு செவிலியர். புதுச்சேரியில் தலைமை செவிலியராகப் பணிபுரியும் இவர், அடுத்தாண்டு பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
‘‘நோயாளிகள் பல்வேறு உபாதைகளுக்காக மருத்துவமனைக்கு வருவார்கள். அவர்கள் குணமாகி செல்லும் போது எங்களைப் பார்த்து முகம் மலர்ந்து விடை பெறும் போது கிடைக்கும் திருப்திதான் எங்களைப் போன்ற செவிலியர்களுக்கு கிடைக்கும் பெரிய விருது.

சில சமயம் பிறந்த குழந்தைகள் செயலற்று இருக்கும். தாய் மற்றும் உறவினர்கள் பதட்டத்தில் இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கு உணர்வு கொண்டுவர மருத்துவர், செவிலியர் குழு ஒரு போராட்டமே நடத்தும். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் தாயின் கண்களில் இருந்து வரும் அந்த ஆனந்தக் கண்ணீர்… எங்களுக்கோ குழந்தையை மீட்டுவிட்ட நிம்மதி ஏற்படும். தற்போது பள்ளி மாணவ, மணிகளின் பற்களின் நலம் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

சொந்த ஊர் கடலூர், புதுச்சேரியில் வேலை. விருது குறித்து அறிவிப்பு வந்ததும், தில்லிக்கு பறந்தேன். அங்கு ஜனாதிபதியிடம் விருது பெரும் முன் எப்படி வர வேண்டும், அவரிடம் இருந்து எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும், விருதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் எவ்வாறு இருக்கைக்கு திரும்ப வேண்டும் என்ற ஒத்திகை எல்லாம் நடந்தது. மேலும் நம்முடைய பெயர் அறிவித்ததும், இருக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

எதற்காக நமக்கு விருது வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிடுவார்கள். அதன் பிறகுதான் ஜனாதிபதியை நோக்கி நடந்து செல்ல வேண்டும். வழியில் மத்திய அமைச்சருக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பிறகு ஜனாதிபதி பதக்கம், சான்றிதழ், பரிசு வழங்குவார். விருதினை பெற்றுக் கொண்டு மீண்டும் ஜனாதிபதிக்கு கை கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு இருக்கையில் அமர வேண்டும். விருதினை பார்க்கும் போது எல்லாம் கனவா… நனவா என்று இப்போதும் விளங்கவில்லை. என்னைப்போல் இந்த சேவையில் ஈடுபட்டு வரும் சக செவிலியர்களும் வருங்காலத்தில் இந்த விருதினை பெற வேண்டும்’’ என்றார் மணிமொழி திருமாறன்.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi