பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 12ம் தேதி கும்பக்கரை அருவிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 4வது நாளாக இன்றும், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறை அறிவித்துள்ளனர். மேலும், அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.