கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 385 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோதையாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளபெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில் கோதையாறு, பறளியாறு, தாமிரபரணியாறு ஆகிய அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக 48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை அபாய அளவான 42அடியை தாண்டி 44.46 அடியை எட்டிய நிலையில் பேச்சிப்பாறை அணியில் இருந்து வினாடிக்கு 385 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் கோதையாற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளபெருக்கு காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் ஆக்ரோஷமாக வெள்ளம் கொட்டி வருகிறது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது.