கோவை: தொடர் கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நள்ளிரவு நிரம்பியது. இதனால், உபரிநீர் திறக்கப்பட்டு, பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையில் இருந்து சுமார் 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது துவங்கி உள்ளது. இதேபோல் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் நீலகிரி மாவட்டம் குந்தாவில் 115 மிமீ, கெத்தையில் 45 மிமீ, பரளியில் 22 மிமீ, பில்லூர் அணை பகுதியில் 22 மிமீ, அவலாஞ்சியில் 353 மிமீ., மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் 97 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 10120 கனஅடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு வினாடிக்கு 14,160 கன அடி, 12.30 மணியளவில் 18,160 கன அடி, 1 மணியளவில் 18,160 கன அடி, இன்று காலை 2 மற்றும் 3 மணி அளவில் 18,160 கன அடி நீரும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
இதனால் பவானி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனிடையே இன்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு வரும் 16,140 கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக பவானி ஆற்றின் வழியே திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நேற்றிரவு பில்லூர் அணையில் இருந்து நான்கு மதகுகளின் வழியாக பவானி ஆற்றில் 10,120 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நள்ளிரவு கலெக்டர் ஆய்வு
பில்லூர் அணையில் நீர் திறப்பையொட்டி கோவை கலெக்டர் பவன் குமார், மாவட்ட எஸ்பி., கார்த்திகேயன் உள்ளிட்டோர் நேற்று நள்ளிரவு கொட்டிய மழையில் குடை பிடித்தபடி ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி, சின்னசுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 11.5 அடியும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 7.5 அடியும் உயர்ந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளையும் தண்ணீர் அதிகமாக விழுவதாலும் தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாலும் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலையில் விதிக்கப்பட்ட தடை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக, கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
பஞ்சலிங்க அருவி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் இன்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் கொட்டிய தண்ணீர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி நீர்மட்டம் அதிகரிக்க துவங்கியதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.
இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால் பாலாற்றில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்ய அதிகாலையிலே ஏராளமான பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர். பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு, பாலாறில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் கோயிலில் சாமி கும்பிடவும், அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பாலாறு நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பை பொதுப் பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.