திருவண்ணாமலை: ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்ணமங்கலம் அருகே ஆயிரம் ஏக்கரில் கொளத்தூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சிங்கிரி கோயில் அருகே நாகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணையிலிருந்து ஏரிக்கால்வாய் வழியே நீர் வருகிறது. இதன்மூலம் 40க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்புகிறது. ஜவ்வாது மலைத்தொடரில் சிறிய அளவில் சாதாரண மழை பெய்தால் கூட நாகநதியில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.
அந்த வகையில் ஜவ்வாது மலையில் நேற்று இரவு பெய்த கன மழையால் செண்பகத்தோப்பு அணை முழுக்கொள்ளளவு எட்டி உள்ள நிலையில் இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் நீர்திறக்கப்படுகிறது. நீர்மட்டம் 57 அடியை எட்டியதால் செண்பகத் தோப்பு அணையில் இருந்து நள்ளிரவில் நீர் திறக்கப்பட்டது. செண்பகத் தோப்பு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கண்ணமங்கலம் கமண்டல நாக நதி கரையோரம் மற்றும் செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.