தென்காசி: வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து குற்றால அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடை உத்தரவை அறிந்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.