வருசநாடு/கம்பம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி, சின்னசுருளி அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மிக தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவி குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி, தூவானம் அணை, அரிசிப்பாறை, ஈத்தகாடு வனப்பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையினால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை கருதி சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு…
வருசநாடு அடுத்த கோம்பைதொழு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சின்னச்சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மேகமலை அருவி என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மேகமலை வனப்பகுதி, இரவங்கலாறு, உட்கலாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், சின்னச்சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
இந்த அருவியில் கடந்த மே 5ம் தேதி குளித்துக் கொண்டிருந்தபோது 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அதன்பின்னர் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு உரிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வனத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 15 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.