உடுமலை: தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் பஞ்சலிங்க அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பருவமழை தீவிரமடைந்த நிலையில் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில் விடிய விடிய கனமழை பெய்ததால் பஞ்சலிங்க அருவியில் இன்று அதிகாலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அருவியில் கொட்டிய தண்ணீர் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. அமணலிங்கேஸ்வரர் கோயிலை சுற்றி நீர்மட்டம் அதிகரிக்க துவங்கியதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால் பாலாற்றில் குளித்து அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்ய அதிகாலையிலே ஏராளமான பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்திருந்தனர். பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு, பாலாறில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் கோயிலில் சாமி கும்பிடவும், அருவியில் குளிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பாலாறு நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து அதிகரிப்பை பொதுப் பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.