சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகள், முகத்துவாரம் உள்ளிட்ட 44 இடங்களில் வெள்ள எச்சரிக்கை குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் சென்னை முழுவதும் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனை கணக்கில் கொண்டு நீர்நிலைகளை தூர்வாருதல், மழைநீர் வடிகால் அமைப்பது உள்ளிட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. நாள்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், பணிகளின் நிலை தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டு வருகிறார். சென்னையில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு மழைநீர் தேங்குவதை தடுக்க 762 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வடசென்னை கொசஸ்தலை ஆற்று வடிநில பகுதிகளில் 484 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், தென்சென்னை பகுதியில் 22 கிலோ மீட்டர் வரை பணிகள் நிறைவடைந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களிலும் 28 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் அண்ணா பிரதான சாலை, நெடுஞ்செழியன் சாலை, பாடசாலை, மணலி சின்னசேக்காடு, மாதவரம், முகலிவாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் பணிகள் முடிக்கப்பட்ட சாலைகளில், நிரந்தர சாலை வெட்டு சீரமைப்பு பணிகள், தற்காலிக சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, 100 அடி சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை, மர்மலாங் பாலம் இரும்புலியர் சாலை, வளசரவாக்கம் வள்ளுவர் நகர் சாலை, எருக்கஞ்சேரி சாலை, மேடவாக்கம் மாம்பாக்கம் சாலை, வானகரம் அம்பத்தூர் புழல் சாலை ஆகிய சாலைகளில், சாலை வெட்டு மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் எச்சரிக்கை சிக்னல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுரங்க பாதைகள், பாலங்களின் கீழ் பகுதிகள், ஆற்று முகத்துவரங்கள் என்று 44 இடங்களில் மொத்தமாக இந்த எச்சரிக்கை சிக்னல் பொருத்தப்பட்டு உள்ளது. இது ஸ்கேல் போன்ற அமைப்பு ஆகும். அதாவது சுரங்க பாலத்தின் இரண்டு பக்கமும் இந்த ஸ்கேல் இருக்கும். அதில் ஒரு அடி, இரண்டு அடி என்று குறியீடு இருக்கும்.
வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் எவ்வளவு வருகிறது என்பதை கணக்கிட இந்த குறியீடு உள்ளது. இதில் சுரங்க பாதையில் உள்ள 22 எச்சரிக்கை சிக்னலில் 16 மாநகராட்சியாலும், 6 நெடுஞ்சாலைத் துறையாலும் பராமரிக்கப்படும்.
இந்த அமைப்பு சுரங்கப்பாதைகளில் உள்ள தண்ணீரின் அளவு குறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும். மழைநீர் மேல்புறம் வரை சென்றால், அதாவது அதிக அளவை அடைந்தால் சிவப்பு விளக்கு எரியும். மிதமான அளவு தண்ணீர் இருந்தால் வாகனங்கள் மெதுவாக செல்ல மஞ்சள் விளக்கு எரியும். பச்சை விளக்கு எறிந்தால் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வாகன ஓட்டிகள் கவனமின்றி சென்றால் அவர்களை எச்சரிக்கும். வாகனங்கள் சுரங்கப்பாதை அடியில் சிக்குவதை தவிர்க்க இந்த கருவிகள் பொருத்தப்படுகிறது. வரும் காலங்களில், இந்த சுரங்கப்பாதைகளில் மின்சார மோட்டார்கள் வைக்கப்பட உள்ளன. தண்ணீர் இங்கே உயர உயர தானாக உறிஞ்சும் விதமாக அமைப்புகள், வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* தயார் நிலையில்…
சென்னையில் வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், பொக்லைன் வாகனங்கள் போன்றவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைகாலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு முகாம்களை கண்டறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழையின்போது அனைத்து பணியாளர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்து பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும், என அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
*மீட்பு ஒத்திகை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னையில் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்க பயிற்சி அளித்து வருகின்றனர். இதில், மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்பட்டால் அவரை எப்படி பாதுகாப்பாக மீட்பது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு வீரர்கள் பறிற்சி அளித்தனர்.
மேலும் வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குடங்கள், குடிநீர் பாட்டில்கள், மூங்கில்கள் மற்றும் டியூப்களை பயன்படுத்தி எப்படி மழை வெல்ல பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்வது குறித்தும் செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டது. தண்ணீரில் இரங்கி ஆபத்து காலத்தில் எளிதில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.