சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.338 கோடியில் 12 நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
2025-26 ஆண்டிற்கான நீர்வளத்துறை நிதிநிலை அறிக்கையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடியில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, அரசாணை பெறப்பட்டு முதற்கட்ட ஒப்பந்த பணிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்கியம் மடுவினை மறுசீரமைத்து புத்தாக்கம் செய்யும் பணி, ஒரத்தூர் மற்றும் மணிமங்கலம் கிளையாறுகளின் விடுபட்ட இணைப்பு பகுதிகளை மூடிய கான்கிரீட் வடிகால்வாயாக அமைக்கும் பணி, சோமங்கலம் துணை நதியை மறு சீரமைத்து ஆற்றினுள் நீர்த்தேக்கம் உருவாக்கும் பணி தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது.
இதுதவிர, தீவிர வெள்ள தணிப்பு பணிகளான ஆலந்தூர் மணப்பாக்கம் கால்வாயில் தடுப்புச்சுவர் மற்றும் உள்வாங்கி அமைக்கும் பணி, குன்றத்தூர் வட்டத்தில் கெருகம்பாக்கம் கால்வாயில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, திருநின்றவூர் ஏரியின் வெள்ள நீரை வெளியேற்ற கூவம் ஆற்றுடன் இணைக்கும் மூடிய கான்கிரீட் கால்வாய், பொன்னேரி லட்சுமிபுரம் மற்றும் ஆண்டார்மடம் அணைக்கட்டுகளுக்கு இடையே உள்ள ஆரணியாறு கரையை மறுசீரமைத்து பலப்படுத்தும் பணி, பூண்டி நீர்த்தேக்க உபரி நீர் செல்லும் கால்வாயின் இடதுபுற கரையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணி, திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களில் கிருஷ்ணா குடிநீர் இணைப்பு கால்வாயில் சேதமடைந்த பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, திருத்தணி என்.என்.கண்டிகை அருகில் நகரி ஆற்றின் வலதுபுற கரையில் வெள்ள கரை அமைக்கும் பணி, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் வெள்ள பாதிப்பை குறைப்பதற்கான ஒருங்கிணைந்த வெள்ள மேலாண்மை தீர்வு பணியான அம்பத்தூர் ஏரி உபரிநீர் கால்வாயை கூவம் ஆற்றுடன் இணைக்கும் மூடிய கான்கிரீட் கால்வாய் அமைக்கும் பணி, பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிகளில் ஏற்படும் வெள்ள அபாயத்தை குறைப்பதற்காக தெற்கு பக்கிங்காம் கால்வாயில் இடதுபுறமாக ஒக்கியம் மடுவிற்கு அருகாமையில் கடல் வரைக்கும் ஒரு நேராக வெட்டப்படும் வெள்ளப்போக்கி கால்வாய் அமைக்கும் பணிகளின் முதற்கட்ட பணிகள் முடிந்து இந்த மாதத்திற்குள் அனைத்து பணிகளும் தொடங்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக ரூ.27 கோடியில் தென்சென்னை புறநகர் பகுதிகளின் வெள்ள பாதிப்பை குறைப்பதற்கு தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த மறுசீரமைப்பு மற்றும் புத்தாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர் களிடம் கூறியதாவது:சென்னையில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இவ்வகையான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டது. ஆனால் தற்போது சென்னையை சுற்றி மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே முதல்வர் முன்னுரிமை கொடுத்து பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் பெய்யும் மழை முன்னெச்சரிக்கையாக நிரந்தர தடுப்பு பணிகள் மேற்கொள்ள நீர்வளத்துறை ஆண்டுதோறும் செவ்வென ெசய்து வருகிறது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2021-22ல் ரூ.10.3 கோடி, 2202-23ல் ரூ.15.60 கோடி, 2023-24ல் ரூ.24.64 கோடி, 2024-25ல் ரூ.30.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டு ரூ.35 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள 2022-23ல் ரூ.434.22 கோடி, 2023-24ல் ரூ.327.41 கோடி, 2024-25ல் ரூ.350 கோடி என 4 ஆண்டுகளில் ரூ.1,111 கோடி ஒதுக்கப்பட்டு 55 நிரந்த வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 42 பணிகள் க முடிக்கப்பட்டுள்ளது. 7 இடங்களில் பணிகளை நடந்து வருகிறது. இந்த பணிகளும் பருவமழை தொடங்குவதற்கு முன்பே முடிக்கப்படும். இதன் தொடச்சியாக இந்தாண்டு ரூ.338 கோடி ஒக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பருவமழைக்கு முன்னதாகவே அனைத்து வெள்ள தடுப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.