சிம்லா: இமாச்சல பிரதேசத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி வெள்ள நிவாரண முன்தொகையாக வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட கனமழையால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். இமாச்சலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய அரசின் குழு ஜூலை 19 முதல் 21ம் தேதி வரை பார்வையிட்டது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.200 கோடி வெள்ள நிவாரண முன்தொகையாக வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஊடகத் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார், இதனிடையே, ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மாநில பாஜ தலைவர் ராஜிவ் பிண்டால் ஆகியோருடன் பாஜ தேசியத் தலைவர் ஜேபி. நட்டா, சிராமூரில் வெள்ளத்தால் பாதித்த பவுன்டா பகுதியை பார்வையிட்டார். அப்போது, “இமாச்சலில் பேரழிவினால் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ளும் என உறுதி அளிக்கிறேன்,” என்று தெரிவித்தார்.