திருமலை: தொடர் கனமழை காரணமாக, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இதனை தேசிய பேரிடராக அறிவித்து கூடுதல் நிதி வழங்க வேண்டுமென இரு மாநில முதல்வர்களும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி தீர்த்துள்ளதால், ஆறுகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணா நதியில் மட்டும் விநாடிக்கு 10 லட்சம் கனஅடி வெள்ளம் கரையை தாண்டி ஓடுகிறது.
குறிப்பாக என்டிஆர் மாவட்ட தலைநகரான விஜயவாடா நகரத்தையொட்டி கிருஷ்ணா நதியும், பூதமேறு ஆறும் ஓடுகிறது. இந்த இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விஜயவாடா நகரின் பெரும் பகுதி 4வது நாளாக நேற்றும் வெள்ளத்தில் மூழ்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நகரின் 50 சதவீத பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கிக்கிடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மக்கள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆந்திராவில் சுமார் 20 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடா முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 17 பேர் இறந்துள்ளனர்.
1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இன்னும் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதேபோன்று தெலங்கானாவில் கம்மம், நல்கொண்டா, மகபூபாபாத், நாகர்கர்னூல், ஹனுமகொண்டா, முலுகு, பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள், பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளது. 16 பேர் இறந்துள்ளனர். அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் உட்புறத்தில் உள்ள பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களுக்கு இதுவரை உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்டவை எதுவும் சேர்க்க முடியவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று 3வது நாளாக முதல்வர் சந்திரபாபுநாயுடு விஜயவாடாவில் வெள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகளை மீண்டும் ஆய்வு செய்தார். குடியிருப்பில் சிக்கிய அனைவருக்கும் உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேர்க்க அவர் தீவிரப்படுத்தியுள்ளார். மேலும், சகஜ நிலை திரும்பிய பிறகு இங்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து கணக்கிடப்பட்டு தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி உள்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் அறிக்கை சமர்ப்பித்து கூடுதல் நிதி கேட்கப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதே போல, தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார்.
* சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
விஜயவாடா கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிராக்டர்கள் அல்லது வாகனங்களில் உணவை எடுத்துச் செல்கிறோம். 10 மாவட்டத்தில் இருந்து உணவு தயார் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாகவும் கொண்டு வந்து விநியோகம் செய்து வருகிறோம். எனது நோக்கம் வெள்ளத்தில் சிக்கிய கடைசி பகுதிகளுக்கு கூட உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என 32 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளோம். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அதிகாரிகள், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் நிவாரண பணியில் அலட்சியம் காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
* தெலங்கானாவில் ரூ.100 கோடி சேதம்
தெலங்கானாவில் கம்மம், நல்கொண்டா, மகபூபாபாத், நாகர்கர்னூல், ஹனுமகொண்டா, முலுகு, பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 20 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள், பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளது. 16 பேர் இறந்துள்ளனர். 196 ஏரிகளில் கரைகள், 64 கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை தற்போது குறைந்துள்ளதால் முதல்வர் ரேவந்த்ரெட்டி களத்தில் இறங்கி நிவாரண பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மழைக்கு ரூ.100 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும், பயிர் சேதம் மேலும் பல கோடி இருக்கும் என அதிகாரிகள் கணக்கீடு செய்துள்ளனர்.
* தமிழ்நாடு, கேரளா போல வெறும் ஆறுதல் மட்டும்தானா?
ஆந்திரா, தெலங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக அம்மாநில முதல்வர்கள், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஒன்றிய குழு பார்வையிட்டு சென்றது. அப்போது, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றார். ஆனால் ஒரு ரூபாய் கூட பேரிடர் நிதியாக வழங்கவில்லை. தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியது. ஆனால் தேசிய பேரிடராக அறிவிக்கும் எந்த நடைமுறையும் இல்லை என ஒன்றிய அரசு கைவிரித்துவிட்டது.
அதேபோல, கேரளா மாநிலம் வயநாட்டில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு பல ஊர்கள் இருந்த அடையாளமே தெரியாமல் அழித்துவிட்டது. பிரதமர் மோடியே அங்கு வந்து பார்வையிட்டார். ஆனால் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும், இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்தக் கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. தற்போது தெலங்கானா, ஆந்திர முதல்வர்களின் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா? தற்போது, ஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் தயவால்தான் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணிக்காக ஆந்திராவுக்கு நிதியை வழங்குவாரா? அல்லது அம்மாநிலத்துக்கும் தமிழகம், கேரளாவைப் போல வெறும் ஆறுதலோடு பிரதமர் மோடி நிறுத்திக் கொள்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
* 3 நாட்களாக தவித்த பழங்குடியினர் மீட்பு
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் திண்டி மண்டலம் கோனபோயினப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தவர்கள் நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நல்லமல்லா காட்டில் கடந்த 1ம் தேதி 10 பேர் வழக்கம்போல் தேன் எடுக்க கிராமத்தின் அருகே உள்ள துந்துபி ஆற்றைக் கடந்து, நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நல்லமலா வனப்பகுதிக்கு சென்றனர். இந்நிலையில் திடீரென துந்துபி ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றை கடந்து வர முடியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இரவு பகலாக நல்லமல்லா வனப்பகுதியில் தங்கினர். கிராம மக்கள் ஒத்துழைப்புடன் காட்டில் சிக்கியது குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், நாகர் கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டா எம்எல்ஏ வம்சிகிருஷ்ணா, தேவரகொண்டா எம்எல்ஏ பாலு நாயக் ஆகியோர் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சென்று நேற்று டிரோன் கேமரா மூலம் காட்டில் சிக்கியவர்கள் எங்குள்ளனர் என கண்டுபிடித்தனர். தொடர்ந்து கயிறு கட்டி 10 பேரையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்தனர்.
* ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் ரேவந்த் அதிரடி
தெலங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏரி, குளங்கள், நீர் பிடிப்பு பகுதிகள், ஏரி கால்வாய்கள், நீர் வழித்தட பகுதிகளை மீட்க ஹைட்ரா குழு ஏற்பாடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் யாராக இருந்தாலும் விட்டு வைக்க வேண்டாம் என உத்தரவு அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோன்று மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.