கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் நீர் திறப்பு அதிகரிப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை நீர்பிடிப்பு பகுதியான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லை கிருஷ்ணகிரியில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3.208 கன அடியாக உயர்ந்துள்ளது. 52 அடி உயரம் கொண்ட கே.ஆர்.பி.அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4.000 கன அடி நீர் வெளியேற்றபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும் ஆற்றைக் கடக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.