கோவை: தமிழ்நாடு வானிலை ஆராய்ச்சி மையம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கபட்டு உள்ளது. இதன் காரணமாக, அரக்கோணம் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் கோவை வந்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை சிறுவாணியில் உள்ள கோவை குற்றாலம் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.
கோடை விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.2 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல், மார்ச் மாதங்களில் கோவையில் கடும் வெயில் அடித்ததன் காரணமாக சிறுவாணி நீர் மட்டம் 17 அடியாக குறைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோவை குற்றாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.