ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளத்தால் பாதிக்காத வகையில் பைவலசா ஏரிக்கரை மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனால், இங்குள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பைவலசா ஏரியிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக ஏரி நிரம்பி கரையில் லேசான கசிவுநீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது. ஊரகத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் கிராமத்திற்குள் போகும் அபாயம் இருப்பதால், கரை உடைந்து பெரும் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனையடுத்து ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கோ.கலைச்செல்வி முன்னிலையில், ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு தண்ணீர் வெளியேறாத வகையில் அடைத்தனர். உதவி பொறியாளர் சக்திவேல், பணி மேற்பார்வை பார்வையாளர் சக்கரவர்த்தி, வருவாய்த்துறை அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.


