திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதற்காக வீரணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 9 குழிகள் தோண்டப்பட்டு இதுவரை 183 பொருட்களை கண்டறிந்துள்ளனர். 9வது குழியில் நேற்று முன்தினம் நடந்த அகழாய்வில் 8 கிராம் எடையில், 1.5 செ.மீ உயரம் கொண்ட ஸ்படிக எடைக்கல்லை கண்டெடுத்தனர். இதுவரை கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பானை ஓடுகளை வகைப்படுத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, சுடுமண்ணால் செய்யப்பட்ட பாம்பின் தலைப்பகுதி உடைந்த நிலையில் கிடைத்தது. இதுகுறித்து தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் கூறுகையில், ‘‘சுடுமண் பாம்பின் கண்கள், வாய்ப்பகுதி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. இது 6.5 செமீ நீளம், 5.4 செமீ அகலம் 1.5 செமீ தடிமண் கொண்டதாக உள்ளது’’ என்றார்.