சென்னை: தமிழ்நாட்டில் 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக, சென்னை,புறநகர் பகுதிகள் நேற்று மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் வெறிச்சோடியது. அதைப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும், நேற்று பயணிகள் கூட்டம் அதிக அளவில் இல்லாமல், மிகக் குறைந்த அளவு பயணிகளுடன், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை 6:30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8:20 மணிக்கு மும்பை சென்றடையும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இரவு 8:20 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 11:10 மணிக்கு, டெல்லி விமான நிலையத்தை சென்றடையும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய இரு விமானங்கள், நேற்று போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த விமானங்களில் முன்பதிவு செய்து இருந்த, மிகக் குறைந்த அளவு பயணிகளின், விமான டிக்கெட்கள், வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் சென்னையில் இருந்து கோவா செல்லும் விமானம் சுமார் ஐந்தரை மணி நேரம், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானம் 3 மணி நேரம், சென்னை ஐதராபாத் மற்றும் மதுரை விமானங்கள் 2 மணி நேரம், சென்னை சீரடி விமானம் இரண்டரை மணி நேரம், தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.