புதுடெல்லி: அரியானா முன்னாள் அமைச்சரான கோபால் கோயல் கண்டாவிற்கு சொந்தமான எம்எல்டிஆர் ஏர்லைன்சில் கீதிகா சர்மா என்ற இளம்பெண் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அவர், வடமேற்கு டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்னதாக 4ம் தேதி அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில் கோபால் கோயல் மற்றும் அருணா சந்தா ஆகியோர் தான் தனது சாவிற்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தார். விசாரணை நீதிமன்றம் கோபால் கோயலுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர் கோபால் கோயல் கண்டாவை, நிரபராதி என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளது.