புதுடெல்லி: நாடு முழுவதும் விமான இயக்கம் காலநிலை மற்றும் நிர்வாக காரணமாக சில நேரங்களில் தாமதாக இயக்கப்படுகிறது. நேற்று டெல்லியில் மட்டும் 20 விமானங்கள் மோசமான காற்று காரணமாக திருப்பி விடப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். இந்த பிரச்னை குறித்து விமான நிறுவன பிரதிநிதிகளுடன், ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு நேற்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது விமான தாமதங்கள் குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவும், செக்-இன் கவுண்டர்களில் முழுமையாக பணியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவும் விமான நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார். மூன்று மணிநேரத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் விமான இயக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த நேரங்களில் பயணிகளுக்கு முறையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.