மும்பை: மும்பையில் விமானப் பணிப்பெண் ரூபால் ஓக்ரே என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள என்ஜி வளாகத்தில், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றி வந்த பணிப்பெண் ரூபால் ஓக்ரே (24) என்பவரின் சடலம் கிடந்தது. தகவலறிந்த போலீசார் ரூபால் ஓக்ரேவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மும்பை போலீஸ் டிசிபி தத்தா நலவாடே கூறுகையில், ‘சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் அடுத்த ராஜேந்திரா நகரைச் சேர்ந்த ரூபால் ஓக்ரே, இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார்.
முதற்கட்ட விசாரணையில், ரூபால் ஓக்ரேவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். கொலையான ரூபால் ஓக்ரேவின் செல்போன், கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியை ஆய்வு செய்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.