சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று, நேற்றுமுன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். சந்தேகத்துக்கிடமான பயணிகளை நிறுத்தி, அவர்களுடைய உடமைகளையும் பரிசோதித்தனர். சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, தாய்லாந்து நாட்டிற்கு, சுற்றுலா பயணியாக சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அந்தப் பயணி வைத்திருந்த உடைமைகளை சோதனை நடத்தினர். அப்போது பிளாஸ்டிக் கூடை ஒன்றுக்குள் 2 மலைப்பாம்புகள் நெளிந்து கொண்டு உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுங்க அதிகாரிகள் சிலர் பயந்து அலறிக் கொண்டு ஓடத் தொடங்கினார்.
இதற்கிடையே தைரியமான சில ஊழியர்கள், மலைப்பாம்புகளை பிடித்து அதே பிளாஸ்டிக் கூடையில் போட்டு மூடினர். மற்றொரு கூடையில் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்கு இருந்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் சில வெளிநாட்டு அபூர்வ வகை ஆமைகள், ஆப்பிரிக்க நாட்டு அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் அபூர்வ வகை அணில் போன்றவையும் இருந்தன. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் விடாமல், தனி அறையில் அடைத்து வைத்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, அபூர்வ வகை அபாயகரமான உயிரினங்களை கடத்தி வந்த பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பயணி சென்னையில் உள்ள ஒரு நபர் இந்த உயிரினங்களை கடத்தி வரும்படி கூறினார். அவரிடம் கொடுப்பதற்காக தான் கடத்தி வருகிறேன் என்று கூறினார்.
ஒன்றிய வன உயிரின குற்ற பிரிவு அதிகாரிகள், சுங்க அதிகாரிகள், பயணியை அழைத்துக்கொண்டு, வடசென்னை பகுதியில் உள்ள, அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு வீட்டில் யாரும் இல்லை. அதே நேரத்தில் அந்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், மேலும் சில அபூர்வ வகை உயிரினங்கள் அங்கு இருந்தன. அவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்பு மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
இந்த பயணியிடம் இருந்து இரண்டு அரிய வகை மலைப்பாம்புகள், ஒரு ஆப்பிரிக்க கருங்குரங்கு, மற்றும் அரிய வகை ஆமைகள் 6, ஆப்பிரிக்க அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் அரிய வகை அணில் ஒன்று என பத்துக்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வட சென்னை பகுதியில் உள்ள அந்த வீட்டில் இருந்தும், சில உயிரினங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த உயிரினங்கள் அனைத்தும் தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஆப்பிரிக்க நாடுகள், வட அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பகுதிகளில், அடர்ந்த வனப்பகுதிகளில் காணப்படுபவை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.