சென்னை: சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் தமக்கென்று தனி வரலாற்றை படைத்த கலைஞர் அவர்களின் 5வது நினைவுநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சென்னையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில்,
சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன
கலைஞர் ஒரு தத்துவம்
இன்று
இருமொழிக் கொள்கை என்ற தத்துவம்
தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர்
நெருப்பை அரிப்பதில்லை கரையான்
என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.