மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது புதிய அத்தியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இன்னும் இந்த 2 ஜாம்பவான்களும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்கள் என தெரியவில்லை. இதுகுறித்த கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கூறியதாவது:-ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஆனால் கோஹ்லியின் உடல் தகுதியை பார்த்தால் குறைந்தபட்சம் அவர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார். இந்திய கிரிக்கெட் அணியில் முழு உடல் தகுதி உள்ள வீரராக கோஹ்லி மட்டுமே உள்ளார்.
ஒரு 19 வயதுடைய கிரிக்கெட் வீரர்களிடம் சென்று கோஹ்லியுடன் போட்டி போடுங்கள் என்று கூறுங்கள். நிச்சயம், கோஹ்லி தான் வெற்றி பெறுவார். அந்த அளவுக்கு அவர் உடல் தகுதியுடன் இருக்கிறார். என்னை பொறுத்தவரை கோஹ்லி, ரோஹித் சர்மாவுக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சி இருக்கிறது. ஆனால் இதை முழுக்க முழுக்க அவர்கள் மட்டும்தான் முடிவு எடுக்க வேண்டும். இருவரும் உடல் தகுதியை சரியான முறையில் கையாண்டால் இன்னும் நீண்ட காலம் அவர்களால் இந்திய அணியில் தொடர முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மாவின் பங்கு மிகவும் முக்கியம். டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலுமே அனுபவம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். அனுபவ வீரர்கள் அணியில் இருக்கும் போது அவர்கள் அடுத்து வரும் இளம் வீரர்களை மெருகேற்றுவார்கள்.
இந்திய அணிக்கு தங்களால் எந்த ஒரு பங்களிப்பும் செய்ய முடியாது என்று ஒரு நிலை வந்தாலும், இல்லை தனக்கு உடல் தகுதி போதுமான அளவு இல்லை என்ற நிலை வந்தாலோ, ரன்கள் அடிக்க முடியவில்லை என தெரிந்தாலோ, அந்த சீனியர் வீரர்கள் இளம் வீரர்களுக்கு வழி விட்டுவிட வேண்டும். என்னை பொறுத்தவரை சீனியர் வீரர்களை விட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அதிக உத்வேகத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் போது உங்களுக்கு கொஞ்சம் உத்வேகம் குறையும். இந்த தருணத்தில் ரியான் பராக், ஜெய்ஸ்வால், கில் போன்ற வீரர்கள் எல்லாம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு ஹர்பஜன்சிங் கூறினார்.