சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.
அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024-25ம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.