சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், 60 வயதை கடந்தவர்களுக்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட கடலோர மீனவ குடும்பங்களுக்கு, குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு வழிகாட்டுதலின்படி பயனாளி முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவராகவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிப்பவராகவும் மற்றும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 18ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில், 2023-24ம் ஆண்டிற்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ள தகுதியான 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறாத 15,089 மீனவர்களுக்கு சிறப்பினமாக ரூ.5 ஆயிரம் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மற்றொரு அரசாணையில் கூறியிருப்பதாவது: கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட 2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது. அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக்கோரி பல்வேறு மீனவர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.8.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2024-25ம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையினை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கடந்த 22ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.