மண்டபம்: மீன்பிடி தடைக்காலம் வரும் 14ம் தேதி முடிவடையும் நிலையில், மண்டபம் பகுதியில் விசைப்படகுகளை மீனவர்கள் சீரமைத்து, வண்ணம் தீட்டி சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். தமிழக கடலோரப் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவுடன் தடைக்காலம் நிறைவடைகிறது. தடைக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் வரும் 15ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீனவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சுழற்சி முறையில் மன்னார் வளைகுடா கடலான தென்கடல், பாக்ஜலசந்தி கடலான வடகடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தடை காலத்தில் மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் ஏற்றி என்ஜின் பழுது பார்த்தல், படகு கட்டைகளை சீரமைத்தல், பைபர் முலாம் பூசுதல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சீரமைப்பு பணிகள் முடிந்த படகுகளில் வண்ணம் பூசி அழகுபடுத்தினர். இதையடுத்து, சீரமைக்கப்பட்ட படகுகளை கடலில் இறக்கி சோதனை ஓட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் சீரமைத்து மீன்பிடிக்க செல்ல தயாராக நிறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, பாக் ஜலசலந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். இதற்கு காரணம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால், கணவாய் மீன்கள், நண்டுகள் இந்த பகுதியில்தான் அதிகம் கிடைக்கும்.
தடைக்காலம் முடிந்து மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்லவே அதிக ஆர்வம் செலுத்துவர். 61 நாள் தடை காலத்தால் மண்டபம் பகுதியில் சுமார் ரூ.10 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தடை காலத்தில் வருமானம் இன்றி மீனவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த காலத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண நிதியாக ரூ.8,000 வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.